×

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியர் கொலை.! போலீசார் விசாரணை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர், பூட்டிய வீட்டுக்குள் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரத்தை சேர்ந்தவர் சுரேஷ்(44). இவர் திண்டுக்கல்லில் தங்கி, கேட்டரிங் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி செல்வி. இவர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களும் தந்தை சுரேஷுடன் திண்டுக்கல்லில் வசித்து வருகின்றனர். பாப்பம்மாள்புரத்தில் செல்வி மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுரேஷ், செல்வியை  செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாக செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்தது.

இதனால் பாப்பம்மாள்புரத்தில் உள்ள தனது உறவினர்களை, வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். வீடு பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். இதில், வீட்டில் உள்ள பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் செல்வி, இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதில் செல்வி தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கப்பட்டதால், உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் செல்வியின் உடலை கைப்பற்றி. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Andipatti Government Hospital Police , Nurse killed at Andipatti Government Hospital Police investigation
× RELATED மேலூர் அருகே பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழைநீர்; மாணவர்கள் அவதி