×

வணிக வளாகம், வாகன நிறுத்த வசதிகளுடன் சென்னையில் 16 பணிமனைகள் பஸ் நிலையங்கள் நவீனமாகிறது: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை: சென்னையில் உள்ள 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வாகன நிறுத்த வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனை மற்றும் பிராட்வே பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக, மத்திய பணிமனை, அடையாறு,  திருவான்மியூர், தி.நகர், சைதாப்பேட்டை, மந்தைவெளி, தாம்பரம், கலைஞர் நகர், வடபழனி, பூந்தமல்லி, அண்ணாநகர், வில்லிவாக்கம், வியாசர்பாடி, வள்ளலார் நகர், டோல்கேட், திருவொற்றியூர் உள்ளிட்ட 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. இதில் ஒன்றான மத்திய பணிமனையில் ஆய்வு செய்துள்ளோம்.

இந்த பணிமனைகளில் வணிக வளாகங்கள் மற்றும் வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டவை அமைய உள்ளன. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை பெறப்பட்டுள்ளது.  இன்ஜின், சேஸ் சிறப்பாக உள்ள 1500 பழைய பேருந்துகளுக்கு கூண்டு கட்டுவது தொடர்பாக முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு 2,213 புதிய பேருந்துகள் மற்றும் 500 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

34 கோடி ெபண்கள் இலவச பயணம் பெண்களுக்கு கட்டணமில்லா பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சாதாரண கட்டண பேருந்துகளில் தினசரி 38  லட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்கின்றனர்.  இது மகளிரிடம்  மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு, முதலமைச்சர் மீதான மாண்பினை பலமடங்கு  உயர்த்தி உள்ளது. இதுநாள் வரை 34 கோடி பெண்கள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல்  பயணம் செய்துள்ளனர், என போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார்.

Tags : Chennai ,Minister ,Rajakannappan , Commercial Complex, Vehicle, Facility, Bus Stands, Minister Rajakannappan
× RELATED சென்னை முழுவதும் நவீன...