×

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சி, 74 ஒன்றியங்களை கைப்பற்றி திமுக வரலாற்று சாதனை: 95 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை பிடித்தது: அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும், 9 மாவட்டம், 74 ஒன்றியங்களை முழுமையாக திமுக கைப்பற்றியுள்ளது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடந்தது. அதன்படி கடந்த 6ம் தேதி, 9ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக, அதிமுக மற்றும் பாமக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் அவரவர் கட்சி சின்னத்தில் நேருக்கு நேர் போட்டியிட்டனர்.

அதன்படி, தேர்தல் நடந்த 9 மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 140 ஆகும். மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் எண்ணிக்கை 1381, மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 2,901, மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 22,581 ஆக இருந்தது. 9 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் மொத்தம் 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 2,981 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இதில், ஆரம்பம் முதலே திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். ஆனாலும், நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பிறகும் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடந்தது. தொடர்ந்து, நேற்று 2வது நாளாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் நேற்று காலை நிலவரப்படி 138 இடங்களில் திமுக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவுக்கு 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் மட்டுமே கிடைத்துள்ளது. மற்ற இடங்களில் அதிமுக பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. இது அந்த கட்சிக்கு, இதுவரை நடந்த எந்த தேர்தலிலும் கிடைத்திராத தோல்வியாக கருதப்படுகிறது.

அதேபோன்று, தமிழகத்தில் போட்டியிட்ட பாமக, பாஜ, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தன. அதிமுக மட்டும், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் தலா ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியை பிடித்துள்ளது. அடுத்ததாக, 1,381 இடங்களில் நடந்த ஒன்றிய கவுன்சிலர் தேர்தலிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நேற்று இரவு நிலவரப்படி 1,027 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 204 இடங்கள் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்று 2வது இடத்தில் உள்ளது. பாமக 45 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 88 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி, தமிழகத்தில் அதிக ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பிடித்துள்ளதால், மொத்தமுள்ள 74 ஊராட்சி ஒன்றியங்களில் 74 ஒன்றியங்களையும் திமுகவே கைப்பற்றியுள்ளது.

அதேபோன்று, 2,901 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுக ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களே அதிக இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 2வது இடத்தில் அதிமுக இருந்தது. 22,581 இடங்களுக்கு நடந்த ஊராட்சி மன்ற கவுன்சிலர் பதவிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இதிலும், திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர்களே பெரும்பாலானோர் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 1,521 மாவட்ட கவுன்சிலர் மற்றும் 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளன.
அதன்படி, திமுக கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களை பிடித்துள்ளது. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுகவுக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் 5, விடுதலை சிறுத்தைகள் 3 இடங்களை பெற்றுள்ளன. அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது அந்த கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவர், முதல்வராக பதவியேற்று 5 மாதங்களில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில், கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல், 2021ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல், தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் சந்தித்தனர். இந்த மூன்று தேர்தல்களிலும் திமுக பிரமாண்ட வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Tags : Tamil Nadu ,DMK , Rural Local Election, DMK, Historic Achievement
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...