×

சுற்றுச்சூழலை பாதிக்கும் உலோக கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா: ஆய்வில் கண்டுபிடிப்பு

துபாய்: சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருக்கும் தொழிற்சாலை கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் தொழிற்சாலை கழிவுகள் சுற்றுப்புற சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.  இந்நிலையில் செப்பு எனப்படும் தாமிரம், தொழிற்சாலைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. செப்பு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக சிலி திகழ்கிறது. இங்கு சுரங்கங்களில் இருந்து தாமிரம் அதிகம் எடுக்கப்படுகிறது.

மேலும் உலோக கழிவுகளும் அதிகளவில் சேர்ந்து சுற்றுப்புற சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது. இதனை சீர்படுத்தும் வகையில் சிலியை சேர்ந்த நுண்ணுயிர் ஆய்வாளரான நாடாக் ரியல்ஸ் என்பவர் உலோகத்தை சாப்பிடும் பாக்டீரியா மூலம் ஆய்வு மேற்கொண்டார். இது வெற்றியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சான்டியாகோவிற்கு வடக்கே 1,100 கிமீ தொலைவில் உள்ள அன்டோஃபகஸ்டா என்ற தொழில் நகரத்தில் உள்ள ஆய்வகத்தில், 33 வயதான  நாடாக் ரியல்ஸ்  நுண்ணுயிர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தார். இவர் தாமிரம் பிரித்தெடுத்தலை மேம்படுத்த நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி ஒரு சுரங்க ஆலையில் சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குவியும் கழிவுகள் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுப்பதை உணர்ந்தார். மேலும்  அவற்றை சுற்று சூழலுக்கு கேடின்றி அழிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆய்வில் ஈடுபட்டார்.

இதில் உலோக கழிவுகளை சாப்பிடும் பாக்டீரியாக்களை கண்டறிந்தார். ஒரு ஆணி அளவிலான உலோகத்தை பாக்டீரியாக்கள் சாப்பிட இரண்டு மாதங்கள் வரை ஆனது. தொடர்ந்து நடத்திய ஆய்வுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு மூன்று நாட்களில் ஒரு ஆணி அளவிலான உலோகத்தை காலி செய்ததின் மூலம் இந்த புதிய தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தலாம்  என ஆய்வு முடிவை வெளியிட்டார். மேலும் இரசாயன மற்றும் நுண்ணுயிரியல் சோதனைகள் மூலம் இந்த‌ பாக்டீரியா மனிதர்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தாமிரம் அல்லது பிற கனிமங்களின் பெரிய அளவிலான பிரித்தெடுத்தல் பணிகளை சுற்றுப்புற சூழலுக்கு பாதுகாப்பான வகையில் இதன் மூலம் செய்ய முடியும் என ரியல்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளார்.

Tags : Bacteria that destroy metal waste that affects the environment: findings in the study
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்