×

தமிழகத்தில் 5 - 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி? : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை:தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் நீட்டிப்பு மற்றும் தளர்வுகள், கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் 5 முதல் 8ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம், இரண்டு வாரம் என்று தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, நிபா வைரஸ் தாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மட்டும் உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாலை அணிவிக்க வேண்டும்.இந்நிகழ்ச்சிகளில் மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களும் (5 நபர்களுக்கு மிகாமல்) பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் (5 நபர்களுக்கு மிகாமல்) சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடம் முன் அனுமதி பெற்று பங்கேற்கலாம். பொது மக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும். கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் 9, 10, 11, 12ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் சுழற்சி முறையில் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்தக்கட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள், நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இந்த  ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, நிதி துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நோய் தொற்று பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய் தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அதே நேரத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் என்னென்ன முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளலாம். என்ன மாதிரியான வழிமுறைகளை வகுக்கலாம். சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதில் 5 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அது மட்டுமல்லாமல் கோயில்கள், சர்ச்சுகள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை வழங்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என அனைத்து மத தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் குற்றாலம், பாபநாசம், கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள அருவிகள் உள்ளிட்டவை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவின் அறிவிப்பின் அடிப்படையில் என்ன மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிவிப்பு இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியாக வாய்ப்பு உள்ளது.Tags : Q. ,Stalin , முதல்வர், மு.க.ஸ்டாலின், ஆலோசனை
× RELATED தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ...