×

முன்பே செய்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்...: ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி எப்படி சாத்தியம்?: பாஜகவை வறுத்தெடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

புதுடெல்லி: மோடியின் பிறந்தநாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதாக பாஜக கூறிவரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பிரதமர் மோடியின் பிறந்தநாளை (நேற்று) முன்னிட்டு நாடு முழுவதும் மெகா தடுப்பூசி திட்டத்தை ஒன்றிய சுகாதாரத் துறை முடுக்கிவிட்டது. அதன்படி, நேற்றிரவு வரை 2.5 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டுள்ளுது. இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடியின் பிறந்த நாளில் நாடு புதிய வரலாறு படைத்துள்ளது. 2.50 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.  முன்னதாக, பிற்பகல் 1.30 மணியளவில் 1 கோடியை தாண்டிய தடுப்பூசி, பிற்பகல் 2.30 மணி வாக்கில், இந்த எண்ணிக்கை ரூ.1. 25 கோடியைக் கடந்தது. மாலை 3.30 மணி வாக்கில் இந்த எண்ணிக்கை 1.60 கோடியைக் கடந்தது.

நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட இந்த மெகா தடுப்பூசி திட்டத்தில், மக்களுக்கு உதவி செய்வற்காக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று ஒரேநாளில் அதிகளவு தடுப்பூசி போட்ட மாநிலங்களில் கர்நாடகா முதலிடம் பெற்றுள்ளது. அங்கு, 26.92 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. அதற்கடுத்ததாக பீகாரில் 26.6 லட்சமும், உத்தரபிரதேசத்தில் 24.8 லட்சமும், மத்திய பிரதேசத்தில் 23.7 லட்சமும், குஜராத்தில் 20.4 லட்சமும் அதிகபட்சமாக போடப்பட்டுள்ளது. ஒருபக்கம் ஆளும் பாஜக, தடுப்பூசி சாதனையை பேசிவந்தாலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஒன்றிய பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட டுவிட்டில், ‘ஒன்றிய அரசு எதற்காக அதிகளவு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவில்ைல. பல மாதங்களாக குறைந்தளவு தடுப்பூசியே மக்களுக்கு போட்டதற்கான காரணம் என்ன என்பதை பிரதமர் விளக்க வேண்டும்.

இன்று ஒரே நாளில் இத்தனை தடுப்பூசி போடுவது போல், முன்பே போட்டிருந்தால் நிறைய உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்’ என்று கூறியுள்ளார். ேமலும், மக்களவையில் காங்கிரஸ்  துணைத் தலைவர் கவுரவ் கோகோய் கூறுகையில், ‘அதிகளவு தடுப்பூசி போட்டுள்ளதாக பிரதமர் மோடி நினைத்தால், அவர் சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சீனாவில் இந்தியா போட்ட தடுப்பூசியை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகம் போட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், ஒன்றிய இயற்கை எரிவாயு மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சர் ஹர்தீப் பூரி கூறுகையில், ‘மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்படுத்தியதாக கூறி, தவறான தகவல்களை எதிர்கட்சிகள் பரப்புகின்றன. மோடி பிறந்த நாளில் இரண்டு கோடி பேருக்கு தடுப்பூசி போட்ட மகிழ்ச்சியில் நாங்கள் உள்ளோம்’ என்றார்.

மாதம் 20 கோடி தடுப்பூசி
சீரம்  இன்ஸ்டிடியூட் லைப் சயின்சஸ் லிமிடெட் (சி.எல்.எஸ்) தலைமை நிர்வாக அதிகாரி  ஆதார் பூனாவாலா மற்றும் பயோகான் பயோலாஜிக்ஸ் லிமிடெட் (பயோகான்  பயோலாஜிக்ஸ் லிமிடெட்) தலைவர் கிரண் மசும்தார் ஷா ஆகியோர் காணெலி  கூட்டத்தில் உரையாற்றினர். இரு நிறுவனங்களும் தடுப்பூசி மற்றும் உயிரியல் மேம்பாட்டுத் துறையில் இணைந்து செயல்படுகின்றன. அப்போது பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி பூனாவாலா, ‘எம்ஆர்என்ஏ தடுப்பூசி (mRNA Vaccine) தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். இரண்டு ஆண்டுகளில் அதற்கான பணிகள் முடியும். கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை மாதத்திற்கு 16 கோடி என்ற அளவில் இருந்து 20 கோடியாக அதிகரிக்க உள்ளோம்’ என்றார். மேற்கண்ட இரு நிறுவனங்களும் இணைந்து, டெங்கு மற்றும் எச்.ஐ.வி போன்ற பிற நோய்த்தொற்றுக்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஊசிகளை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமும் மோடி பிறந்த நாள்?
மோடி பிறந்த நாளில் 2.5 கோடி தடுப்பூசி போடப்பட்டதாக ஆளும் பாஜக கூறிக் கொண்டாலும், சமூக வலைதளங்களில் பலரும் சகட்டுமேனிக்கு பாஜகவை விமர்சித்து வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த போது, தடுப்பூசி உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு அனுப்பினீர்கள்... பின்னர் தடுப்பூசியை வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்யலாம் என்றால், அதனையும் செய்ய தாமதித்தீர்கள்... தடுப்பூசியை மாநில அரசுகள் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றீர்கள்... இப்போது ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதாக கூறுகின்றீர்கள். அதனை தினமும் சராசரியாக செய்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியுமல்லவா? என்றெல்லாம் விமர்சித்துள்ளனர். இன்னும் சிலர், மோடியின் பிறந்த நாள் தினமும் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும், அப்போதுதான் மக்களுக்கு சீக்கிரமாக தடுப்பூசியை போட்டு முடிப்பார்கள் என்றும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தடுப்பூசி போட்ட விபரங்களை மிகைப்படுத்தி காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.


Tags : Congress ,BJP , Corona vaccine, BJP, Congress leaders
× RELATED காவல் அதிகாரிகள், போலீசாருக்கு மன...