×

திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை: மக்கள் மகிழ்ச்சி.!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இந்நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை வழக்கம்போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் மதியம் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. திடீரென்று இடி மின்னலுடன் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது.

இந்த கனமழையால் திண்டுக்கல், குள்ளனம்பட்டி, ரெட்டியபட்டி, பேகம்பூர், சீலப்பாடி, பாலக்கிருஷ்ணாபுரம்‌ அனுமந்த நகர் பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 2 மணிநேர மழையின் காரணமாக வெப்ப காற்று நீங்கி குளிர்ச்சியான காற்று வீசியது. இதேபோல் திண்டுக்கல்லை சுற்றியுள்ள நந்தவனப்பட்டி, தாடிக்கொம்பு அகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Rain in Dindigul: People happy!
× RELATED திண்டுக்கல்லில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது