×

திமுக முப்பெரும் விழா கொண்டாட்டம்; சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கிறது: மாவட்டங்களில் காணொலி வாயிலாக காண ஏற்பாடு

சென்னை: திமுக முப்பெரும் விழா சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் காணொலி வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து திமுக முப்பெரும் விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த முப்பெரும் விழாவில் திமுகவை வளர்த்த மூத்த முன்னோடிகளுக்கு பெரியார் விருது,  அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மக்கள் நலனுக்காகப் பாடுபட்டோருக்கும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளித்திடும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முப்பெரும் விழாவில்  பெரியார் விருது ‘மிசா’ பி.மதிவாணன், அண்ணா விருது சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எல்.மூக்கையா, கலைஞர் விருது சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, பாவேந்தர் விருது வாசுகி ரமணன், பேராசிரியர் விருது சட்டமன்ற முன்னாள் கொறடா பா.மு.முபாரக் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது.

கொரோனா காலமாக இருப்பதால் கடந்த 2020ம் ஆண்டு முப்பெரும் விழா திமுக தலைமை அலுவலகமான  அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காணொலி வாயிலாக நடந்தது. அதே போல இந்த ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா வருகிற 15ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடக்கிறது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது.

இந்த முப்பெரும் விழாவை  மாவட்டங்களில்-ஒன்றியங்களில் இருந்து காணொலி வாயிலாக காணவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து விழாவை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள், திமுக முன்னணியினர் செய்து வருகின்றனர்.Tags : Three Diplomonth Festival ,Chennai ,Q. ,Stalin , DMK Trilateral Celebration; Tomorrow is going on in Chennai under the leadership of MK Stalin: Arrangements will be made to watch the video in the districts
× RELATED சென்னையில் உள்ளாட்சி தேர்தல்...