×

கூட்டாஞ்சோறுக்கு ஈடு இணையில்லை!

நன்றி குங்குமம் தோழி

நடிகை மீரா கிருஷ்ணன்

‘‘சாப்பாடுன்னா எனக்கு அம்மா ஊட்டி விட்டது தான் இன்றும் நினைவுக்கு வரும்’’ என்று பேசத் துவங்கினார் நடிகை, வீணை கலைஞர், கர்நாடக இசைக் கலைஞர், செய்தி வாசிப்பாளர் என பல முகங்கள் கொண்ட மீரா கிருஷ்ணன். ‘‘எனக்கு வெரைட்டி சாப்பாடு எல்லாம் பிடிக்காது. அதை நான் சாப்பிடணும்ன்னு கூட விரும்ப மாட்டேன். சாதாரணமா பருப்பு, ரசம் மற்றும் தயிர் சாதம் இருந்தா போதும். மூணு வேளையும் அதை குடுத்தாக்கூட சாப்பிடுவேன். எதுவுமே இல்லைன்னா கூட தயிர் சாதம் இருந்தா நான் உயிர் வாழ்ந்திடுவேன்.

சின்ன வயசில் அம்மா கையால சாப்பிட்டது தான் எனக்கு இன்னும் நினைவு இருக்கு. நான் கல்லூரிக்கு போகும் வரை அம்மா எனக்கு ஊட்டி விடுவது தான் வழக்கம். அம்மா ஒரு பள்ளியில் தலைமை பேராசிரியரா வேலைப் பார்த்திட்டு வந்தாங்க. அதனால என்னை கல்லூரிக்கு அனுப்பிட்டு அவங்களும் வேலைக்கு போகணும். அப்ப நான் பாட்டு மற்றும் வீணை கத்துக்கிட்டு இருந்தேன். காலை ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன். வீடு அயனாவரத்தில் இருந்தது. அங்க இருந்து திருவல்லிக்கேணியில் சங்கீதம், வீணை கத்துக்க போவேன். பயிற்சி முடிச்சிட்டு கல்லூரிக்கு போகணும். அதனால காலையிலேயே எங்க வீட்டில் சாப்பாடு தயாராயிடும். காலையில் பருப்பு சாதம் அம்மா செய்திடுவாங்க.

அதையே தான் நானும் அவங்களும் மதிய உணவுக்கு எடுத்துப்போம். நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்பதாலே, எங்க நான் சாப்பிடாம போயிடுவேன்னு அம்மா ஊட்டி விடுவாங்க. எனக்கு இரண்டு அண்ணன். நாங்க எல்லாரும் இரவு ஒண்ணா தான் சாப்பிடுவோம். அம்மா கையில் பிசைந்து எல்லாருக்கும் போடுவாங்க. எவ்வளவு சாப்பிடுறோம்ன்னு அளவே தெரியாம சாப்பிடுவோம்’’ என்றவர் கல்யாணத்திற்கு பிறகு தான் தானே தட்டில் போட்டு
சாப்பிட பழகினாராம்.

‘‘எனக்கு இப்ப இல்லை ஆரம்பத்தில் இருந்தே ஓட்டல் சாப்பாடு பிடிக்காது. கல்லூரி படிக்கும் போது இசை கச்சேரி மற்றும் வீணை கச்சேரி எல்லாம் செய்ய வெளிநாடுகளுக்கு சென்று இருக்கேன். அங்க நம்மூர் மாதிரி சாதம், பருப்பு, சாம்பார், ரசம் எல்லாம் கிடைக்காது. அவங்களின் உணவுப் பழக்கம் வேறு. சில சமயம் ஃபிளைட்டில் போகும் போது தக்காளியில் நாலு பருக்கை சாதம் சேர்த்து தருவாங்க. அதை கூட அலைஞ்சிட்டு சாப்பிட்டு இருக்கேன். அப்ப என்னுடன் வரும் சக கலைஞர்கள் எல்லாம் கிண்டல் செய்வாங்க. ஒரு முறை இலங்கைக்கு கச்சேரிக்கு போன போது, அங்கு நிறைய அைசவ உணவுகள் தான் இருந்தது. நானோ சைவ உணவு மட்டும் தான் சாப்பிடுவேன். எனக்கு என்ன செய்றதுன்னு முதல்ல தெரியல.

சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு பழகின எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. அதன் பிறகு அந்த கச்சேரியை அமைத்து கொடுத்தவர் இலங்கையில் தான் இருந்தார். அவர் வீட்டில் இருந்த குக்கர், அரிசி அப்புறம் தயிர் எல்லாம் வாங்கி வந்து நானே வீட்டில் சாதம் வடிச்சு சாப்பிட்டேன்’’ என்றவர் இங்கிலாந்து சென்றும் அங்கு தயிர் கிடைக்குமான்னு தேடியுள்ளார். ‘‘கச்சேரிக்காக சிங்கப்பூர், மலேசியா, சிலோன் எல்லாம் போய் இருக்கேன். அங்கு போகும் போது எல்லாம் எனக்கு பிரச்னை இருக்காது. எப்படியும் அங்கு சாதம், தயிர் கண்டிப்பா இருக்கும். தப்பிச்சுப்பேன். ஆனா இங்கிலாந்து போன போது ஒரு பக்கம் பிரட் இருக்கும். மறுபக்கம் அசைவ உணவுகள் வகை வகையா இருக்கும். பிரட்டை பார்த்தாலே எனக்கு பிடிக்காது.

நம்ம ஊரில் உடல் நிலை சரியில்லை, ஜுரம் வந்தா தான் பிரட் சாப்பிடுவாங்க. இங்க எல்லா நேரமும் பிரட் தான். சரி தயிராவது இருக்கான்னு கேட்ட போது. அவனுக்கு கர்ட்ன்னு ஆங்கிலத்தில் சொன்னா புரியல. காரணம் அவங்க தயிரை யோகர்ட்ன்னு தான் சொல்றாங்க. அங்க ஓட்டலில் உள்ளவங்களுக்கு தயிரை புரிய வைக்கிறதுக்குள்ள ரொம்பவே கஷ்டப் பட்டுட்டேன். ஒரு வழியா புரிந்து அங்க கொண்டு வந்த யோகர்ட்டையும் சாப்பிட முடியல. அதில் அவ்வளவு இனிப்பா இருந்தது. அவங்க தயிரில் நிறைய பிளேவர்கள் அதாவது கிரீன் ஆப்பிள், ஸ்ட்ராபெரி... ன்னு சுவையை சேர்த்து சாப்பிடுறாங்க’’ என்றவரின் கைப்பையில் எப்போதும் நார்த்தங்கா ஊறுகாய் பாட்டில் இருக்குமாம்.

‘‘கல்யாணத்துக்கு பிறகு எல்லாம் மாறிடுச்சு. பெண்களுக்கே உரிதான பொறுப்புணர்ச்சி எனக்கு வந்தது. இது நாள் வரை எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டாங்க. இப்ப நான், என் மகன், மகளுக்கு அதை செய்ய ஆரம்பிச்சேன். என்னதான் பொறுப்பு வந்தாலும், பழசை மறக்கக்கூடாதுல்ல. அம்மா என்னை பார்க்க வரும் போது எல்லாம் எனக்கு சாப்பாட்டை கையில் பிசைந்து தரச்சொல்வேன். சிங்கப்பூர், மலேசியாவில் நம்மூர் சாப்பாடு கிடைச்சாலும். அவங்க தெருக்களில் தேள், பூரான்னு பூச்சிகளை எல்லாம் வறுத்து வச்சு இருப்பாங்க. அங்க இருக்கிறவங்க அதை ஸ்னாக்ஸ் போல வாங்கி சாப்பிட்டுக் கொண்டே போவாங்க. எனக்கு அதை பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கும். ஆனா அதன் பிறகு பழகிட்டேன்.

ஒரே மேசையில் என்னுடன் வரவங்க அசைவம் சாப்பிடுவாங்க. நான் முகம் சுளிக்காமல் என்னுடைய சைவ உணவினை சாப்பிட பழகிட்டேன். வெளிநாடு மட்டும் இல்லை நம்மூரில் ஷூட்டிங் நடந்தாலும் எனக்கு சாதம், ரசம் கண்டிப்பா இருக்கணும். அவங்க சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம் எல்லாம் இருக்குன்னு சொல்வாங்க. என்ன இருந்தாலும் எனக்கு ஒரு பிடி சாதம் சாப்பிட்டா தான் அன்றைய உணவை சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படும்’’ என்றவருக்கு தென்னிந்திய சைவ உணவு தான் மிகவும் பிடிக்குமாம்.

‘‘என் அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க செய்ற கத்திரிக்காய் கூட்டு, பாவற்காய் பிட்லை, அடை அவியல், வெங்காய வத்தக்குழம்புக்கு நான் அடிமை. அவங்க அதிகம் நல்லெண்ணைதான் சாப்பாட்டில் சேர்த்துப்பாங்க. அது ஒரு தனி சுவையா தரும். அது மட்டும் இல்லை மணமாவும் இருக்கும். அவங்களுக்கு சாப்பாட்டை வீணடிக்க பிடிக்காது. காலையில் வைத்த ரசம், சாம்பார், கூட்டு பொரியல் இருந்தா... எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதை அடுப்பில் கொதிக்க வைத்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையா இருக்கும். அதில் என்ன சேர்ப்பாங்கன்னு எனக்கு இன்றும் தெரியாது. அவங்க கை அதில் ஏதாவது ஒரு மேஜிக் செய்து சுவையா மாத்திடும்.

அதே சமயம் பழைய சாதம் மாவடு ஊறுகாய்க்கு நிகர் வேறு ஏதும் இல்லை. எனக்கு சமைக்க ரொம்ப பிடிக்கும். தென்னிந்திய உணவு சமைப்பதில் நான் எக்ஸ்பர்ட். எந்த உணவாக இருந்தாலும், அளவோட தான் செய்வேன். விருந்தாளி வராங்கன்னா முன்கூட்டியே சொல்லிடணும். திடீருன்னு வந்தாங்கன்னா அவங்களுக்கு எக்ஸ்ட்ரா சாப்பாடு இருக்காது’’ என்றவர் வெளியே ஓட்டலுக்கு சென்றாலும் அங்கும் நம்மூர் உணவினை தான் தேடிச் சுவைப்பாராம். ‘‘பசங்க வெளியே ஓட்டலுக்கு போகலாமான்னு சொல்வாங்க. மாசம் ஒரு முறையாவது போவோம். என் மகள் எல்லா உணவையும் சுவைப்பா. ஆனா நான், என் கணவர், மகன் மூவர் மட்டும் தென்னிந்திய உணவினை தான் விரும்புவோம்.

காரைக்குடி பணியாரத்துக்கு சிறப்பு என்பதால், அந்த ஊருக்கு போகும் போது எல்லாம் பணியாரம் சாப்பிடாமல் வரமாட்டேன். அதே போல ஷூட்டிங்காக ரயிலில் பயணம் செய்யும் போது, நான் வீட்டில் இருந்தே சாப்பாடு கொண்டு வந்திடுவேன். ஒரு முறை தோழிகளுடன் சென்னையில் உள்ள புகழ்பெற்ற தாய்லாந்து உணவகத்துக்கு போனேன். அங்கு சாப்பாடு நல்லா இருக்கும்ன்னு  சொல்லி அழைச்சிட்டு போனாங்க. என் தோழிகள் எல்லாம் நல்லா சாப்பிட்டாங்க. எனக்கு தான் அது இறங்கல. அங்கே போயும் தயிர் சாதம் இருக்கான்னு கேட்டேன். வெயிட்டர் பார்த்து சிரிச்சுட்டார். என்ன செய்றது. என் தோழிகள் எல்லாம் சாப்பிடுற வரை காத்திருந்து, வீட்டிற்கு  போய் ரசம் சாதம் சாப்பிட்டேன். அதே போல் சீடை முறுக்கு எல்லாம் விரும்பி சாப்பிடுவேன்.

இனிப்புகள் எனக்கு சுத்தமா பிடிக்காது. பால் பாயசம் தவிற வேறு எந்த இனிப்பும் நான் விரும்பி சாப்பிட மாட்டேன். மாசத்தில் ஒரு நாள் எங்க வீட்டில் நோ கேஸ் டே. அதாவது அன்று கேஸ் அடுப்பை பயன்படுத்தி உணவு செய்யமாட்டோம். வெள்ளை பூசணியை நன்றாக துருவிக் கொள்ளவும். அதில் உப்பு, தயிர், கடுகு, உளுந்து எல்லாம் தாளித்து சேர்க்கணும். சாப்பிடும் போது நன்கு குழைச்ச தயிர் சாதம் சாப்பிடுவது போல் இருக்கும். அதே போல் குடைமிளகாய், கேரட்டினை பொடியாக நறுக்கி அதில் சிறிது உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள் கலந்து சாப்பிடுவோம்.

வாழைத்தண்டில் மாஇஞ்சி அல்லது சாதாரண இஞ்சி, கருவேப்பிலை, உப்பு சேர்த்து மிக்சியில் அடிச்சு வடிகட்டி குடிச்சா மோர் போல இருக்கும். கேரட், வெள்ளரியை பொடியாக நறுக்கி அதில் பனீரை உதிர்த்து போட்டு வறுத்த வேர்க்கடலை சேர்த்து சாப்பிட்டா அவ்வளவு நல்லா இருக்கும். எல்லா காய்கறி, வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் அரைத்து பிறகு கொதிக்க வைத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப் போல குடிக்கலாம்’’ என்று தான் விரும்பும் உணவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார் நடிகை மீரா கிருஷ்ணன்.

தொகுப்பு: ப்ரியா

Tags : Partnership ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...