×

திமுக பிரமுகர் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 5 பேர் பிடிப்பட்டனர்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(50). திமுக ஒன்றிய விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர். மேலும், இவர், மதூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர். இவருக்கு சங்கரி(48) என்ற மனைவியும், 2 மகன்கள், 1 மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை சண்முகம், வாலாஜாபாத் சென்று விட்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருமுக்கூடல் கிராமம் அருகே சாலையோரம் நின்றிருந்த 2 பேர் திடீரென சண்முகத்தின் தலையில் இரும்பு ராடால் பலமாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில், சண்முகம் பலத்தகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில்,இந்த கொலை வழக்கு தொடர்பாக மதூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்து(56), சேகர்(37), ராஜசேகர்(33), கண்ணன்(50), நித்தியானந்தம்(25) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வரும் ஊராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்ததுள்ளது. இதனால் சண்முகத்தை கொலை செய்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : AIADMK ,DMK , Five persons, including an AIADMK leader, have been arrested in connection with the murder of a DMK leader
× RELATED அதிமுக ஆட்சி மீது அமைச்சர் சரமாரி...