×

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது 9 அடி உயர பெருமாள் சிலை கண்டெடுப்பு

அரியலூர்: அரியலூர் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிபோது கண்டெடுக்கப்பட்ட 9 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட பெருமாள் சுவாமி சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கரையான்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 4 அடி தோண்டியபோது கற்சிலை தென்பட்டது. இதனையடுத்து அந்த கற்சிலையை மேலே எடுக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் முயன்றனர். ஆனால் அந்த சிலை 9 அடி உயரத்தில் இருந்ததால் பொதுமக்களால் மேலே எடுக்க முடியவில்லை.

இதனால் பொக்லைன் வரவழைக்கப்பட்டு சிலையை மேலே எடுத்தபோது அது பெருமாள் சிலை என தெரிய வந்தது. சிலை 9 அடி நீளம், 3 அடி அகலத்தில் இருந்தது. இதை பார்த்து வியப்படைந்த மக்கள் கோவிந்தா கோவிந்தா என கூறி வழிபட்டனர். பின்னர் சிலையை சுத்தம் செய்து பாலாபிஷேகம் செய்து மாலையிட்டு தீபாராதனை காட்டினார். தகவலறிந்து வந்த அரியலூர் ஆர்டிஓ ஏழுமலையிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலை திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாகவும், தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரின் ஆய்வுக்கு பின்னரே கண்டெடுக்கப்பட்ட சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது குறித்து தெரியவரும் என்று ஆர்டிஓ ஏழுமலை கூறினார்.

Tags : 9 feet high Perumal statue found while digging a ditch to build a house
× RELATED தெலங்கானாவில் ரூ.23 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்