×

ஏழ்மை நிலையிலும் கொரோனா நிவாரணத்துக்கு 2 சவரன் நகை கொடுத்து முதல்வரின் நெஞ்சத்தை நெகிழ வைத்த மாணவியின் கடிதம்: பொன்மகளுக்கு படிப்புக்கேற்ற வேலை; முதல்வர் உறுதி

சென்னை: சேலத்தை சேர்ந்த பட்டதாரி மாணவி செளமியா அளித்த கடிதத்தினால் நெஞ்சம் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவியின் கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மேட்டூர் அணையைத் திறக்க சேலம் மாவட்டம் சென்றிருந்தார். அப்போது, பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் அளித்தனர். இதில், செளமியா என்ற மாணவி அளித்த கடிதத்தைப் படித்துப் பார்த்த முதலமைச்சர் நெஞ்சம் நெகிழ்ந்தார். மேலும் அவரது கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.  

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு: மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ரா. சௌமியா அளித்த கடிதத்தின் விவரம் வருமாறு:
‘என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா நிதித்தொகையாக எனது கழுத்திலிருந்த 2 பவுன் செயினை நிதியாகக் கொடுக்க விரும்புகிறேன்’
ரா. சௌமியா ஆகிய நான் பி.இ கம்ப்யூட்டர் சைன்ஸ் பட்டதாரி. எனது தந்தை ஆவின் ஓய்வு பெற்ற பணியாளர். என் மூத்த சகோதரிகள் இரண்டு பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. எனது தந்தை சம்பளம், எங்களை படிக்க வைக்கவும் சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும் செலவாகிவிட்டது. மூன்று சகோதரிகளும் பட்டதாரிகள். ஆனால், வேலை கிடைக்கவில்லை. எனது தந்தை பணி ஓய்வு பெற்று வந்த சில மாதங்களில் என் அம்மாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு  கோவை தனியார் மருத்துவமனையில் 12.3.2020ல் இறந்துவிட்டார். எனது தந்தை பணி ஓய்வுப் பெற்ற சேமிப்பு அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்திற்காக செலவு செய்துவிட்டார். மருத்துவசெலவு (சுமார் 13 லட்சம்) ஆகிவிட்டது. எங்களுக்கு சொந்தவீடு கிடையாது. ஆகையால், அம்மா இறந்தபிறகு மேட்டூரில் குடியிருந்த நாங்கள் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு தற்போது எனது தந்தை பிறந்த கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் தங்கி உள்ளோம். எங்கள் ஆதார், விலாசம் எல்லாமே மேட்டூர் என்றுதான் உள்ளது. எனது தந்தைக்கு பணி ஓய்வு தொகையாக ரூபாய் 7,000 (ஏழாயிரம்) மட்டும் கிடைக்கிறது. வீட்டு வாடகை ரூபாய் 3000 (மூவாயிரம்) போக ரூ.4000 (நாலாயிரம்) வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். திருமணமாகிய எனது சகோதரிகள் எங்களுக்கு உதவிசெய்கின்ற வசதிவாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஆகையால், மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். எனக்கு அம்மாவாக இருந்து எனக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர்பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : CM , Letter from a student who gave 2 shaving jewels to the Corona relief in poverty and moved the principal's heart: study work for dolls; CM confirmed
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...