×

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது என்றும், தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை:வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை ஓட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி  அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு(13ம் தேதி முதல் 16ம் தேதி வரை) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகப்பட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியசை ஒட்டி இருக்கும். இன்றும், நாளையும் வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று முதல் 15ம் தேதி வரை தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் 16ம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இந்த தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Tags : Bay of Bengal ,Tamil Nadu ,Meteorological , Depression continues in Bay of Bengal for 4 days Dry weather prevails in Tamil Nadu: Meteorological Department
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...