×

குடியாத்தத்தில் நள்ளிரவு கெங்கையம்மன் சிரசு திருவிழா: பக்தர்களை திருப்பி அனுப்பினர்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில், ெவளி மாவட்ட, வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர். இந்நிலையில், இந்தாண்டு கொரோனா நோய் தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களின்றி விழா நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, வைகாசித் திருவிழாவையொட்டி பால் கம்பம் நடும் விழா, காப்பு கட்டும் விழாக்கள் கடந்த மாதத்தில் நடந்தது.

இதையடுத்து கோயிலில் திருக்கல்யாணம் கடந்த 11ம் தேதி இரவு பக்தர்களின்றி கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று தேர்த்திருவிழா நடந்தது. அப்போது தேர் சிறிது நிமிடங்களில் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இந்த விழாவில், திமுக எம்எல்ஏ அமுலு, சப்-கலெக்டர் ஷேக் மன்சூர், தாசில்தார் வத்சலா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நள்ளிரவு 1 மணியளவில் சிரசு திருவிழா ஆகம விதிமுறைப்படி நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தை சுற்றி அம்மன் சிரசு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து அம்மன் சிரசு மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் உடலில் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். விழாவில், பக்தர்கள் பங்கேற்பதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஏடிஎஸ்பி மதிவாணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக விழாவை காண வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.


Tags : midnight of the Republic ,Kenkayamman Sirasu , Midnight at Gudiyatham Gengayamman Sirasu Festival: Devotees sent back
× RELATED கொள்ளிடம் அருகே 40 பேரை பதம்பார்த்த விஷ வண்டுகள் அழிப்பு