×

தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் இன்று முதல் தீவிரமாகிறது காலை 10 வரை மட்டுமே கடைகள் திறப்பு: கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

* மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு
* டீ கடைகளுக்கு அனுமதி இல்லை
* நடைபாதை காய்கறி, பூ, பழக்கடைகளுக்கு தடை
* ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, பலசரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதுப்புது கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 10ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு வரும் 24ம் தேதி வரையில் அமலில் இருக்கும். இந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனாலும், பொதுமக்கள் அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்தி வெளியே சுற்றி வருகின்றனர். இதனால், கொரோனா தினசரி பாதிப்பு குறையவில்லை. எனவே, கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கொரோனா பரவல் குறித்து சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சட்டமன்ற அனைத்துக்கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஒருமித்த கருத்தாக முடிவு எடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டிலும் படிப்படியாக இந்த நோய்த்தொற்று, பிப்ரவரி மாதக் கடைசியில் நாளொன்றுக்கு 450 என்ற நிலை மாறி தற்பொழுது நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் 13.5.2021ம் நாள் கணக்கீடுபடி, தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.83 லட்சமாக உள்ளது.  
தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 10.5.2021 காலை 4 மணி முதல் 24.5.2021 காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 9.5.2021 அன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலும், கொரோனா நோய்த் தொற்று பரவல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இன்று (14ம் தேதி) நான் நடத்திய கூட்டத்தில், அரசு உயர் அலுவலர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தற்போது 10ம் தேதி முதல் 24ம் தேதி காலை 4 மணி முடிய அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலத்தில், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, 15.5.2021 காலை 4 மணி முதல் 24.5.2021 காலை 4 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

அதன்படி,
* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். டன்சோ போன்ற மின் வணிக நிறுவனங்கள் இணைய வணிகம் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.  
* ஏடிஎம், பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும்.
* ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.
*  பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.
* காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
* தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.
* மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.
* வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும்.
* அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும்.  
* இ-பதிவு முறை 17.5.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.
* ஏற்கெனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
* ஏற்கெனவே அறிவித்தவாறு முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் (16.5.2021 மற்றும் 23.5.2021) அமல்படுத்தப்படும்.
* மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்த கடைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரவலாக மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே நான் பலமுறை வலியுறுத்தியவாறு ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே, நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்த முடியும். எனவே, நேற்று (13ம் தேதி) நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதித்தவாறு, காவல் துறையினர், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். கொரோனா மேலாண்மைக்கான தேசியவழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


* இ-பதிவு செய்து பயணிக்கலாம்
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே அத்திவாசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்பவர்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு (e-registration) செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக்கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin , Curfew rules in Tamil Nadu intensify from today till 10 am
× RELATED சொல்லிட்டாங்க…