×

கடத்தல் கும்பலுக்கு உதவி சுங்க அதிகாரிகள் 14 பேர் மீது வழக்கு: சிபிஐ அதிரடி நடவடிக்கை

திருவனந்தபுரம்: கடத்தல்காரர்களுக்கு உதவி செய்ததாக கூறப்பட்ட புகாரில், கோழிக்கோடு விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் 14 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் உட்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வந்தது. மேலும், இது தொடர்பாக சிபிஐ.க்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சில சுங்க இலாகா அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது. இதில் லட்சக்கணக்கில் பணம், பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக, சுங்க இலாகா அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமானால், கேரள அரசின் அனுமதி தேவை. இதையடுத்து, அனுமதி கோரி சிபிஐ சார்பில் கேரள அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கேரள அரசு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில், சுங்க இலாகா அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய, நேற்று கேரள அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கடத்தல்காரர்களுக்கு உதவிய 14 சுங்க இலாகா அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில், 4 பேர் சூப்பிரண்டுகள். மற்றவர்கள் ஆய்வாளர்கள் ஆவர்.

Tags : CBI , Customs officials prosecute 14 for kidnapping gang: CBI action
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...