×

கோயிலில் திருவாபரணம் திருடிய பூசாரி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டாரக்கரை வாளகம் பகுதியை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (39). நெய்யாற்றின்கரை அருகே பெரும்பழுதூர் விஷ்ணுபுரம் மகாவிஷ்ணு கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். கோயில் மூல விக்ரகத்தில் சாத்தப்பட்டிருந்த திருவாபரணத்தில் இருந்த 3.50 பவுன் தங்க சங்கிலி திடீரென மாயமானது. இது குறித்து நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் பூசாரி சங்கர நாராயணன் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். சங்கர நாராயணன் இதற்கு முன்பு அருமானூர் கோயிலில் இருந்தும் நகைகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். அந்தமான், டெல்லி, மும்பை, பரீதாபாத் உள்பட பல இடங்களில் ஐயப்பன் கோயில்களிலும், வர்க்கலா சிவசக்தி கோயில், எரிமேலி ஐயப்பன் கோயிலிலும் இவர் பூசாரியாக இருந்துள்ளார். இந்த கோயில்களிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்றும், அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் கூறினர்.

Tags : Priest arrested for stealing jewelery from temple
× RELATED நகைகளுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது