×

சொத்து தகராறில் விபரீதம் அப்பா, அக்காவை சரமாரி வெட்டி கொல்ல முயற்சி: தப்பியோடிய தம்பிக்கு வலை

பெரம்பூர்: சொத்து தகராறில் தந்தை மற்றும் அக்காவை கத்தியால் வெட்டி தம்பி கொல்ல முயன்ற சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜெய்சிங் (80). புரசைவாக்கம் தாணா தெருவில் சிமென்ட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி திருநாவுக்கரசி (78). இவர்களுக்கு சங்கீதா (47) என்ற மகளும், பத்திரிநாத் (43), ஜெகநாத் (37), அரிநாத் (34) என்ற மகன்களும் உள்ளனர். கடைசி மகன் அரிநாத் தனியார் கம்பெனியில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

கடந்த 3 மாதத்துக்கு முன்பு சொத்தை பிரித்து தரும்படி தனது தந்தை, சித்தப்பா ஆனந்த்சிங் ஆகியோரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை ஜெய்சிங்கை அடித்த அரிநாத், பின்னர் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து, நேற்று அதிகாலை 5 மணி அளவில் அயனாவரம் வந்த அரிநாத், வீட்டின் வெளிப்பக்க கதவை பூட்டிவிட்டு பின்பக்க மதில்சுவரில் எகிறி குதித்து உள்ளே சென்று, அங்கிருந்த தந்தை மற்றும் அக்கா சங்கீதாவிடம் சொத்தை பிரித்து தரும்படி மறுபடியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அரிநாத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை, அக்கா ஆகியோரின் தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பினார். படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த அயனாவரம் போலீசார், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் எழும்புரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சங்கீதா சுயநினைவின்றி ஆபத்தான நிலையில சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அரிநாத்தை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Attempt to kill father and sister by barrage in property dispute: web for fleeing uncle
× RELATED சொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை: உறவினர்களுக்கு வலை