தங்கவயல்: பொதுமக்கள் நீரின் முக்கியத்துவம் உணர்ந்து குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி குடிநீரை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதி பவனேஷ் தெரிவித்தார்.
தங்கவயல் தாலுகா சட்ட சேவை உதவி மையம், தங்கவயல் குடிநீர் வாரியம் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் உலக குடிநீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தங்கவயல் குடிநீர் வாரிய வளாகத்தில் கடைபிடிக்க பட்டது. இதில் கலந்து கொண்டு நீதிபதி பவனேஷ் பேசும் போது, ``1992-ஆம் ஆண்டு ஐநாவின் சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் உள்ளூர் நீர்நிலைகளை கண்காணித்து நீரின் தரம், வளம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் கிளீன் வாட்டர் பவுண்டேசன் இத்தினத்தை 2003ல் அறிவித்தது.
குடிநீர், உயிரினங்களுக்கான நீர், மனிதர்களின் இதரத்தேவைகளுக்கான நீர் என்று தண்ணீர்தான் பூமியின் இயங்கு சக்தியாக உள்ளது. அந்த தண்ணீரை காக்க வேண்டியது நமது முக்கிய கடமையாக உள்ளதால், அதனை கண்காணிப்பதும் மிக அவசியமானதாக உள்ளது. அதனால் தான் இந்த ஆண்டு சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோலார் மாவட்டத்தில் கோடை காலம் வந்தாலே தண்ணீர் தட்டுபாடு ஏற்படுகிறது. குடிமக்கள் அனைவருக்கும் சுத்தமான, சுகாதாரமான குடி நீரை அரசு வழங்க வேண்டிய கடமை உள்ளது. அதே போல் பொதுமக்கள் நீரின் முக்கியத்துவம் உணர்ந்து குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி குடிநீரை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். குடி ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சோதி பாசு பேசும் போது இந்த பூமியில் மனித குலம் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் வாழ தண்ணீர் வேண்டும். இந்த நாட்டில் ஐம்பது சதவீத மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. ஒரு காலத்தில் அடர்ந்திருந்த காடுகள் காரணமாக மழை பொழிந்து நீர் நிலைகள் நிறைந்திருந்தது. இன்று தொழில் வளர்ச்சி காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு நீர் ஆதாரங்கள் வற்றி போய் விட்டது. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக பேத்தமங்கலத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பட்டு தங்கவயல் நகருக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய பட்டது. பேத்தமங்கலம் அணை வறண்டு போனதால், சுத்திகரிப்பு நிலையம் செயல்பட முடியவில்லை. ஆனால் தங்கவயல் நாகாவரம் பாலாற்று படுகையில் தாராளமான நீர் ஆதாரம் இருந்தும் அது பயன்படுத்தப்படாமல் உள்ளது’’ என்றார்.
