×

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை...புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முக்கிய முடிவு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவி வருவதால் கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.கொரோனா வைரஸ் ஒரு ஆண்டுக்கும் மேலாக உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தற்போது பல நாடுகளில் கொரோனாவின் 2வது அலை வீசுவதால் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி ஒரு பக்கம் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும், தொற்று பரவலை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இந்த சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகெங்கும் 4,36,377 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,12,18,504ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 77 லட்சத்து 67 ஆயிரத்து 631 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 9,538 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 2,681,680 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 7 லட்சத்து 69 ஆயிரத்து 196. சிகிச்சை பெறுபவர்களில் 88,600க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு விகிதம் 33% அதிகரித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் மொத்த வைரஸ் பாதிப்பில் 85 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 21ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடைகள் முழுவதுமாக அடைக்கப்படும் மக்கள் வெளியில் வருவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர், கார்கோன், உஜ்ஜைன், ரத்லம், சிந்த்வாரா உள்பட 10 நகரங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட அனுமதி கிடையாது என்றும் அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்திலும் கொரோனா 2வது அலை தொடங்கியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி மாவட்டங்களில் பரவி வருகிறது.

 இதில் குறிப்பாக அதிகளவு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களை தொடர்ந்து அவர்களது பெற்றோர்களுக்கும் பரிசோதனை செய்ததில் 10க்கும் மேற்பட்ட பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஒரு சில பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது.

 இதில் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவதை உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்துறை கண்காணிக்க வேண்டும், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என  பரிசோதனை நடத்த வேண்டும். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் அளித்து நோய் தொற்றை குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து டெல்லியில் இன்று மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க என்ன என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சியின் வாயிலாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன் சுகாதாரதுறை செயலாளர்களும் இருந்தனர். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சை மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் நேரத்தில் கொரோனா பரவி வருவதால், இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி மாநிலத்தில் எந்த அளவுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்தும், தடுப்பூசி செயல்முறையை எவ்வாறு விரைவுபடுத்துவது, குறிப்பாக 5 மாநில தேர்தல் முடிந்த பின்பு இரவு நேர ஊரடங்கு அல்லது பகல் நேரத்தில் குறிப்பிட்ட சில மணி நேர ஊரடங்கு விதிக்கலாமா என்பன குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


Tags : Corona ,Modi , Corona resurfacing: Prime Minister Modi's consultation with state chief ministers ... Key decision on imposing new restrictions
× RELATED திராவிட மாடல் திட்டங்களை மண்ணில்...