சென்னை: தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் எஞ்சிய 3 வேட்பாளர்களை கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. அந்த கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெளியிட்டது.
* தளி - நாகேஷ்குமார்
* உதகை - போஜராஜன்
* விளவங்கோடு - ஆர்.ஜெயசீலன்
பாஜக முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 17 வேட்பாளர்களின் விவரம்;
* திருவண்ணாமலை- தணிகைவேல்
* நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி
* குளச்சல் - ரமேஷ்
* ராமநாதபுரம் - குப்புராம்
* மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி
* துறைமுகம் - வினோஜ் பி செல்வம்
* ஆயிரம் விளக்கு - குஷ்பு
* திருக்கோவிலூர் - கலிவரதன்
* திட்டக்குடி (தனி)- பெரியசாமி
* கோவை தெற்கு- வானதி சீனிவாசன்
* விருதுநகர் - பாண்டுரங்கன்
* அரவக்குறிச்சி - அண்ணாமலை,
* திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்
* திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
* காரைக்குடி - ஹெச்.ராஜா
* தாராபுரம் (தனி) - எல்.முருகன்
* மதுரை வடக்கு - சரவணன்
மீண்டும் இந்தியில் வேட்பாளர் பட்டியல்:
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள இக்கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், வேட்பாளர்களின் பெயர், தொகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த ஓர் இடத்திலும் தமிழ் இல்லை. இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதனிடையே புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பெயர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ் இடம்பெறவில்லை. இதனால் தமிழகத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
