திண்டுக்கல்: 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாழ்பட்டு உள்ள தமிழகத்தை மீட்கவே வந்துள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நத்தம் வேட்பாளர் ஆண்டி அம்பலம், வேடசந்தூர் வேட்பாளர் காந்திராஜனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர்; வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த நத்தம் விஸ்வநாதன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 14 வயதில் அரசியலுக்கு வந்து பல பொறுப்புகளில் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். 50 ஆண்டுகாலம் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வருகிறேன். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாழ்பட்டு உள்ள தமிழகத்தை மீட்கவே வந்துளேன்.
10 ஆண்டுகால கொடுமையான ஆட்சியை அகற்றவே வந்துள்ளேன். ஜெயலலிதாவிடமே கொள்ளை அடுத்தவர் நத்தம் விஸ்வநாதன். தன்னிடமே கொள்ளையடித்ததால் நத்தம் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு தரவில்லை. தோற்றுவிட்டு வா என்று ஆத்தூர் தொகுதியில் ஜெயலலிதாவால் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் தான் நத்தம் விஸ்வநாதன். ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமியை எதிர்த்து யாராவது வெற்றி பெற முடியுமா? 100 நாட்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துளேன். 100 நாட்களில் பிரச்சனைகளை எப்படி தீர்க்க முடியும் என்று முதல்வர் பழனிசாமி கேட்கிறார்?
முதல்வர் பழனிசாமிக்கு கொள்ளை அடிக்க மட்டுமே தெரியும்; மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியாது. அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச பொருட்கள் காய்லாங்கடையில் உள்ளன. 2016 தேர்தலில் அதிமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியை அதிமுக நிறைவேற்றியதா? திமுக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்துக்குள் நீட் தேர்வு நுழையவில்லை. தமிழகத்துக்குள் நீட் நுழைவுத்தேர்வு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம். மகளிருக்கு செல்போன் தருவோம் என்ற வாக்குறுதியை கடந்த தேர்தலிலும் அதிமுக அளித்துள்ளது. தவறான, பொய்யான வாக்குறுதிகளை அதிமுக இந்த தேர்தலில் அளித்துள்ளது.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவதாக அதிமுக பொய்யான வாக்குறுதி அளித்துள்ளது. தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சம் பேருக்கு வேலை தர முடியுமா? திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை அப்படியே அதிமுக காப்பி அடித்துள்ளது. விஷம் போல் ஏறிவரும் விலைவாசியை கட்டுப்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் உணவுப் பொருட்கள் விலை குறைவாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேசினார்.
