×

அதிமுகவிற்கு ஓட்டு போடாதீங்க...காலில் விழுந்து பிரச்சாரம் செய்யும் சீர்மரபினர் நலச்சங்கத்தினர்!!

தேனி :அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என வலியுறுத்தி, பெரியகுளத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் காலில் விழுந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.டிஎன்டி சான்றிதழ் வழங்காதது மற்றும் எம்பிசி பிரிவில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து சீர்மரபினர் நலச்சங்கத்தினர், அதிமுவிற்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். தென்மாவட்டங்களில் உள்ள 68 சமுதாயங்களை உள்ளடக்கிய சீர்மரபினர் நலச்சங்கத்தினர், தங்களுக்கு டிஎன்டி ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் என தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

மேலும் இச்சமுதாயத்தினர் இடம் பெற்றுள்ள எம்பிசி பிரிவில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து சின்னமனூர் அருகே அப்பிபட்டியில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது அதிமுகவிற்கு ஓட்டு போட மாட்டோம் எனக்கூறி, சமுதாய மக்களுடன் சேர்ந்து பால், அகல்விளக்கு மீது சத்தியம் செய்தனர்.

இதே போல் தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட எண்டப்புளி புதுப்பட்டி கிராமத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கருப்பு கொடிகளுடன் வீடு விடாக சென்று, பொதுமக்களின் காலில் விழுந்து ‘அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம்’ பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போடி சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக சீர்மரபினர் சமுதாயத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Tags : சீர்மரபினர்
× RELATED உரம் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் வலிறுத்தல்