×

சென்னையில் பிரபல ரவுடி தலை சிதைத்து கொடூர கொலை!: கடன் தொகையை பெற வந்த போது வெட்டி சாய்ப்பு..!!

சென்னை: சென்னை அசோக் நகரில் பிரபல ரவுடி சிவகுமார் தலை முழுவதும் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூரை சேர்ந்த ரவுடி சிவகுமார் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்தாண்டு உத்திரமேரூர் அருகே துப்பாக்கி முனையில் ரவுடி சிவகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கத்தி, செல்போன்கள் மற்றும் பணமும் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த சிவகுமார், ஜஸ்டின் என்பவருக்கு கடன் கொடுத்த 10 லட்சம் ரூபாயை பெறுவதற்காக அசோக் நகர் போர்டல் காலனியில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது பின் தொடர்ந்து வந்த கும்பல், அவரை கொடூரமாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. கொலைசெய்யப்பட்ட ரவுடி சிவகுமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவரின் இல்ல பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று குத்தாட்டம் போட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஜாம்பஜார் தோட்டம் சேகர் கொலைக்கு பழிவாங்கும் வகையில் அவரது கூட்டாளிகள் சிவகுமாரை வெட்டி சாய்த்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவகுமாரை கொலை செய்தவர்களை போலீசார் வாய்வீசி தேடி வருகின்றனர். கடன் தொகையை பெற வந்த போது ரவுடியை வெட்டி சாய்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Chennai , Chennai, famous rowdy, murder
× RELATED சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பு:...