×

ஆவடி, முருகன் கோயில் அருகில் உயர் கோபுர மின் விளக்கு பழுது: இருளில் மூழ்கிய பகுதியை கடக்க மக்கள் சிரமம்

ஆவடி: ஆவடி ரயில்வே ஸ்டேஷன் சாலை, முருகன் கோயில் அருகில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியாமல் கிடக்கின்றன. இதனால், அங்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். ஆவடி, திருமலைராஜபுரம், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் முருகன் கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோயிலுக்கு ஆவடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலை ஒட்டி உயர்கோபுர மின்விளக்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள  4விளக்குகளின் வெளிச்சம் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், பாதசாரிகள் பயனடைந்து வந்தனர். இந்த கோபுரத்தில் உள்ள விளக்குகள் அனைத்தும் பழுதாகி பல மாதங்களாக கிடக்கின்றன. இதனால் இருள் சூழ்ந்த சாலையில் பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல், அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள முருகன் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், இச்சாலையில் வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன. இச்சாலையை பயன்படுத்த தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், ரயில் பயணிகளும் சென்று வருகின்றனர்.

இச்சாலையில் முருகன் கோயில் ஒட்டி உள்ள மின்கம்பம் கம்பத்தில் உள்ள விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் கிடக்கின்றன. இதனால், அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து கிடக்கிறது. இச்சாலையில் செல்லும் பக்தர்கள், ரயில் பயணிகள், வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். மேலும், இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண்களிடம் சில்மிஷம், செயின் பறிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இச்சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வாகன ஓட்டிகளும் காயமடைகின்றனர். இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள், பலமுறை ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகின்றனர். எனவே, இனிமேலாவது ஆவடி நகராட்சி அதிகாரிகள் கவனித்து மின் விளக்கை எரிய செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Avadi ,Murugan Temple , Avadi, Murugan Temple, high tower, electric lamp
× RELATED தடுப்புச்சுவர் மீது பைக் மோதி...