×

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் நீலகிரியில் 30 சதவீத பஸ்கள் இயக்கம்

ஊட்டி : போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்காலிக பணியாளர்களை கொண்டு நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் நேற்று 30 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.புதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை துவக்க வேண்டும். பண பலன்கள் அனைத்தையும் உடனே வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 2வது நாளாக நேற்றும் பணிக்குச் செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  முதல் நாளான நேற்று முன்தினம் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். 2வது நாளான நேற்று மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களை தேர்வு செய்து பஸ்கள் இயக்கப்பட்டன. போதிய பயிற்சி இல்லாமல் பொதுமக்கள் செல்லும் அரசு பஸ்களை தற்காலிக பணியாளர்களை கொண்டு இயங்குவது தவறு என நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் தொழிற் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

பயிற்சி இல்லாத ஓட்டுநர்களால்  விபத்து அபாயம் : போக்குவரத்து  கழக நிர்வாகம், ேவலை நிறுத்த போராட்டத்தால் பெரிய பாதிப்பில்லை என்பது  போல் காண்பிக்க ஜீப், வேன் ஓட்டுநர்களை வைத்து அரசு பஸ்களை இயக்கி  வருகிறது.ஏற்கனவே அரசு பஸ்கள் போதிய பராமரிப்பின்றி உள்ள நிலையில் பயிற்சி  பெற்ற போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் ஓட்டி வருகின்றனர்.

தற்போது பஸ்களின் நிலை தெரியாமல், தனியார் ஓட்டுநர்கள் ஓட்டி வருகின்றனர்.  இதுபோன்ற போதிய பயிற்சி இல்லாதவர்களை வைத்து ஓட்டுவதால் விபத்து ஏற்பட  கூடிய அபாயம் உள்ளது, என்றனர்.

Tags : Ooty: Transport workers on strike in the Nilgiris district with temporary workers
× RELATED மாவட்டங்களில் 10 முதல் 1 மணிவரை சேவை...