×

திருப்போரூர் - நெம்மேலி சாலையில் வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கும் சீமைக் கருவேல முட்செடிகள்: உடனே அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூர் - நெம்மேலி சாலையில், வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்க்கும் நிலையில், சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பழைய மாமல்லபுரம் சாலையையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூர் - நெம்மேலி இடையே 3 கிமீ. தூர சாலையும், பக்கிங்காம் கால்வாயில் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

இச்சாலையை பயன்படுத்தி திருப்போரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வேளாண் அலுவலகம், தொடக்கக் கல்வி அலுவலகம், காவல் நிலையம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு கானத்தூர், முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம், குன்றுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை, தெற்குப்பட்டு, வடநெம்மேலி, புதிய கல்பாக்கம், நெம்மேலி, சூளேரிக்காடு, கிருஷ்ணன் காரணை, பட்டிபுலம், சாலவான் குப்பம் உள்ளிட்ட கடற்கரையை ஒட்டிய கிராம மக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல் திருப்போரூர், ஆலத்தூர், தண்டலம், செம்பாக்கம், மடையத்தூர், கொட்டமேடு, மயிலை, கரும்பாக்கம், முள்ளிப்பாக்கம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நெம்மேலியில் செயல்படும் அரசு கலைக்கல்லூரிக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி மூடப்பட்டுள்ளது.

இந்த சாலையின் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் பல்வேறு புதர்ச்செடிகள் வளர்ந்துள்ளன. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்வோர், நடந்து செல்வோர் மீது, அங்குள்ள மரங்களின் முட்செடிகள் உரசி காயத்தை ஏற்படுத்துவதோடு, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், இரவு நேரங்களில் இதனால் பாதிக்கப்படும், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

சாலையை பராமரிக்க வேண்டிய நெடுஞ்சாலைத் துறை, இதனை கண்டு கொள்ளாமல் உள்ளது. இதனால் சீமைக் கருவேல மரங்கள் பெரிய அளவில் வளர்ந்து, அப்பகுதி காடுபோல் காட்சியளிக்கிறது. இதையாட்டி, பக்கிங்காம் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள பாலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, திருப்போரூர் - நெம்மேலி இடையே நெடுஞ்சாலையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் முன் வர வேண்டும். அந்த சாலையில் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் பாதிக்காத வகையில் நிழல் தரும் மரங்களை நட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Thiruporur - Nemmeli ,motorists ,road ,public , Thiruporur - Nemmeli road It catches the eyes of motorists Sessile oak thorns: Public urge to remove immediately
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி