×

பெண் பணியாளரை பணி நீக்கம் செய்த கல்லூரிக்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை

சென்னை: பாலியல் தொந்தரவு புகார் அளித்த பெண் பணியாளரை பணிநீக்கம் செய்த லயோலா கல்லூரிக்கு அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பணியாற்றிய பெண் ஒருவர், அந்த கல்லூரியில் பணியாற்றிய கல்லூரி அலுவலர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் அளித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆணையம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கல்லூரி நிர்வாகம் ரூ.64.3 லட்சம் இழப்பீடாக வழங்க கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஐசக் மோகன்லால் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, லயோலா கல்லூரிக்கு 64.3 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்ரவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Tags : Interim injunction against the order imposing a fine on the college which dismissed the female employee
× RELATED ஊராட்சி வளர்ச்சி திட்ட நிதியை ...