×

‘யார்க்கர் கிங்’ நடராஜனுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

சேலம்: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 3 வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாகி அசத்திய நடராஜனுக்கு, அவரது  சொந்த ஊரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் வலைப்பயிற்சி வீரராக இடம் பெற்றார். முன்னணி வீரர்கள் காயம் அடைந்ததால், பின்னர் அவர் ஒருநாள், டி20, மற்றும் டெஸ்ட் போட்டி என அடுத்தடுத்து 3 விதமான போட்டிகளிலும் அறிமுகமாகி, முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால், ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களின் செல்லப்பிள்ளையாகவும் மாறினார். ஆஸி. தொடர் முடிந்த நிலையில் இன்று தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வருகிறார். கடந்த நவம்பர் 6ம் தேதி நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதேநேரத்தில் இந்திய அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால், முதன்முதலாக தனது குழந்தையை காணும் ஆவலில் உள்ளார். இதனிடையே சேலம் வரும் நடராஜனுக்கு அவரது கிரிகெட் அகடமி, குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகையில், ‘மாலை 4.15 மணிக்கு சின்னப்பம்பட்டி பஸ் ஸ்டாப் சந்தைப்பேட்டையில் இருந்து, அவரது வீடுவரை சிறப்பான வரவேற்பு ஊர்வலம் நடக்கிறது. மேலும், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் சிறிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. நாளையே (22ம் தேதி) சென்னைக்கு புறப்பட்டு சென்று விடுவார் என்பதால், அவரை பார்த்து வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் இன்று மாலையே வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்,’ என்றனர்.

Tags : Natarajan , Welcome arrangements for ‘Yorker King’ Natarajan are in full swing
× RELATED ஒத்தக்கடையில் நாளை உங்கள் தொகுதியில்...