×

போலீசாரின் எச்சரிக்கையை மீறி பைக்கில் சென்று ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்ற இளம்பெண் உள்பட 4 பேர் மீட்பு: குன்றத்தூர் அருகே பரபரப்பு

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே போலீசாரின் எச்சரிக்கையை மீறி, தரைப்பாலத்தில் பைக்கில் சென்ற 4 பேர் வெள்ளத்தில் அடித்து சென்றனர். அவர்களை, மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் அன்சாரி (20), அவரது சகோதரி தமீமா (18), இவர்களது நண்பர்கள் ஆனந்த் (25), ராஜ் (25). நேற்று முன்தினம் மேற்கண்ட 4 பேரும், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க குன்றத்தூர் கடை வீதிக்கு பைக்கில் சென்றனர். பின்னர், வீட்டுக்கு புறப்பட்டனர். குன்றத்தூர் அருகே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை மறித்தனர். அப்போது, கடந்த 2 நாட்களாக பெய்த மழையால், செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள தரைப்பாலம் உடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் மாற்றுப் பாதையில் செல்லுங்கள் என கூறினர்.

ஆனால் போலீசாரின் எச்சரிக்கையை மீறி, 4 பேரும் பைக்கை வேகமாக தரைப்பாலத்தில் இயக்கினர். அப்போது, ஆற்றின் வெள்ளத்தில் 2 பைக்குகளும் நிலைதடுமாறி கீழே விழுந்தன. அதில், 4 பேரும் தண்ணீரில் அடித்துச் சென்றனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, போலீசார் ஓடி வந்து மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தகவலறிந்து விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் வந்து அவர்களை தேடினர். அப்போது, வெள்ளத்தில் அடித்து சென்ற 4 பேரும், தண்ணீரின் நடுவே உள்ள மணல் திட்டு ஒன்றில் ஏறி நிற்பது தெரிந்தது. இதையடுத்து அவர்களை, கயிறு கட்டி மீட்டு கரை சேர்த்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : teenager ,river ,riot ,Kunrathur , Four rescued, including teenager who went on a bike and drowned in a river despite police warnings
× RELATED உல்லாச வாலிபர் கைது