×

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்.!!!

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 10-வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் என்று திமுக  தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு  முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் திமுக பங்களிப்பு என்பது முக்கியமானது. டிசம்பர் 5 காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும்-தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்கும்  தார்மீக ஆதரவு தரும் வகையில் திமுக நடத்தும் கருப்புக் கொடி அறப்போராட்டத்தில் சேலத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்கிறேன். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட செயலாளர்கள் முன்னெடுப்பில் ஒன்றிய  நகர   பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்புடன் விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றிகாணட்டும். விவசாயி வேடம் போட்டு - பசுமை தழைக்கத் தடைபோடும் ஆட்சியாளர்களின் வேடத்தைக் கலைத்திட- கருப்புக்  கொடிகள் உயரட்டும். தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும், டெல்லி போல குலுங்கட்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கிடையே, சேலத்தில் திமுக போராட்டத்துக்கு வரும் தொண்டர்கள், விவசாயிகள் நடுவழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 


Tags : DMK ,Delhi ,district capitals ,Tamil , Support for struggling farmers in Delhi: DMK workers carry black flags in district capitals across Tamil Nadu !!!
× RELATED திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுக்...