×

புரெவி புயல் 12 கிமீ வேகத்தில் நகர்கிறது; நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேக மூட்டம்: தாமிரபரணி ஆற்றோரங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள்

நெல்லை: இலங்கை திரிகோணமலைக்கு அருகே மையம் கொண்டுள்ள புரெவி புயல் 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை முதலே மேகமூட்டம் காணப்படுகிறது. புயலின் போக்கிற்கேற்ப மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் போலீசார் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பேனர்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. தென்மேற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ளது.

பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கிமீ தூரத்திலும், குமரிக்கு தென்கிழக்கே 700 கிமீ தொலைவிலும் இப்புயல் மையம் கொண்டுள்ளது. இலங்கை திரிகோணமலைக்கு 300 கிமீ தொலையில் காணப்படும் இப்புயல் கடந்த 5 மணி நேரத்தில் மெல்ல மெல்ல 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புரெவி புயல் இலங்கை திரிகோணமலையில் இன்று கரையை கடக்க இருப்பதால், அங்கு இன்று கனமழை இருக்கும் என கூறப்படுகிறது. வரும் 4ம் தேதியன்று அதிகாலையில் இப்புயல் குமரி- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. புயல் வருகை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தூத்துக்குடி, ராமேஸ்வரம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்தோடு காணப்படுகிறது. நேற்று நல்ல வெயில் அடித்த நிலையில், புயல் பாதிப்புக்கான அறிகுறிகளே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று எப்போது வேண்டுமானால் மழை பெய்யலாம் என்கிற சூழல் காணப்படுகிறது. புயல் வலுப்பெறுவதால் இடி, மின்னல் மட்டுமின்றி, மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என கூறப்படுகிறது. புரெவி புயல் எதிரொலியால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதையடுத்து இரு தினங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆற்றங்கரை பகுதிகளில் போலீசார் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை பேனர்களுக்கு தொங்கவிடப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று காலையில் ஆற்றில் தண்ணீர் இயல்பாக சென்றதால், குறுக்குத்துறை, சிந்துபூந்துறை, கைலாசபுரம், வண்ணார்பேட்டை பகுதிகளில் மக்கள் வழக்கம்போல் நீராடி சென்றனர். நெல்லை மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் நேற்று முழுவதும் விஏஓக்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட குளங்கள் மற்றும் கால்வாய்களை ஆய்வு செய்து, உடைப்பு பகுதிகள் குறித்து கண்காணித்தனர்.

தொடர்ந்து அவர்கள் தங்கள் கிராமங்களுக்கு உட்பட்ட வாழை விவசாயிகளை சந்தித்து, கம்புகள் வைத்து வாழை மரங்களை கட்டிட கேட்டு கொண்டனர். தென்னை விவசாயிகள், மரங்களில் காணப்படும் ஓலைகளை வெட்டிட அறிவுறுத்தப்பட்டனர்.நெல்லை, தூத்துக்குடியில் மையம் கொண்டுள்ள தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அணைகள் பாதுகாப்பு மற்றும் வெள்ளம் தாக்கும் இடங்களுக்கு இன்று காலை முதல் அனுப்பப்பட்டுவருகின்றனர். மழை தொடர்ச்சியாக பெய்தால் தாமிரபரணியில் நீர்வரத்து அதிகம் இருக்கும் என்பதால் பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை ஆற்றங்கரைப்பகுதிகள் தொடர்ந்து வருவாய்துறை மற்றும் போலீசாரல் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நகர்புறங்களில் அதிக விழிப்புணர்வு
புரெவி புயுல் வரும் முன்பே தென்மாவட்டங்களில் கனமழை குறித்த செய்திகள் தீயாக பரவி வருகின்றன. இதனால் நேற்றும், இன்றும் நகர்புறங்களில் பொதுமக்கள் தங்கள் கைகளில் குடைகளோடு திரிகின்றனர். சிலர் பைக் பெட்டிக்குள் மழைகோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை எடுத்து கொண்டு செல்கின்றனர். புயலும், மழையும் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பை புரெவி புயல் ஏற்படுத்த தொடங்கிவிட்டது.

Tags : storm ,Nellai ,Tenkasi ,rivers ,Tamiraparani ,districts , Purevi storm moves at a speed of 12 km; Cloud cover in Nellai and Tenkasi districts: Warning notices in Tamiraparani rivers
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...