×

உழவன் கணக்கு பார்த்தால் உழவுக்கோலும் மிஞ்சாது: விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை

வேலூர்: விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வேதனையில் தள்ளப்பட்டுள்ள தங்களுக்கு விடிவுகாலம் கிடைக்காதா? என்று தங்களின் கேள்விக்கு விடை என்று கிடைக்கும் என்று விவசாயிகள் வேதனையில் தள்ளப்பட்டுள்ளனர். உழவன் கணக்கு பார்த்தால் உழவுக்கோல் கூட மிஞ்சாது என்ற சொல்வடை உழவனின் உண்மை நிலையை நெத்தியடியாய் சொல்லும். உலகில் ஒரு நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அந்த நிறுவனம்தான் விலையை நிர்ணயிக்கிறது. இது எல்லா நிலையிலும் உண்டு, விவசாயத்தை தவிர. காரணம், விவசாயி உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு விலையை நிர்ணயிப்பது அரசும், வியாபாரிகளும்தான். அதுவும் இன்று மாறி கார்ப்பரேட் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் நிலையை எட்டியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக இன்றும் உள்ளது விவசாயம்தான். நாட்டின் 70 சதவீத மக்கள் இன்றும் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். அதுவும் தமிழ்நாட்டில் விவசாயம் வெறும் ஒரு தொழில் மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறையாகவும் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் மரபு ரீதியாக விவசாயத்தில். இன்றும் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்துறையின் பங்கு 21 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மீது அதிக தாக்கம் செலுத்தும் துறையாக வேளாண்துறை உள்ளது. மாநில மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரத்தில் விவசாயிகள் எவ்வளவு உழைத்தாலும் அவர்களது விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யப்படுவது இல்லை. அதேபோல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு தண்ணீர் கொடுப்பது அரசின் கடமை. அதை செய்ய மறப்பதால், விவசாயிகள் பிச்சைக்காரர்களின் வருமானத்தினை விட கேவலமான வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர், எத்தனை பேர் பொருளாதார உச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்று பார்த்தால் ஒரு சதவிகிதம் கூட கிடையாது.
இதற்கு முக்கிய காரணம், விவசாயி விளைவிக்கும் பொருட்களின் விலையேற்றத்தை முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டதுதான். மற்ற துறையில் இதுபோல் இல்லை. தொழில்நிறுவனங்களே உற்பத்தி பொருட்களுக்கு விலையை நிர்ணயிக்கின்றன.

உதாரணமாக 1970ம் ஆண்டில் 35 குதிரை சக்தி கொண்ட ஒரு டிராக்டரின் விலை 20 ஆயிரம் ரூபாய். அப்போது 57 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல் 45 முதல் 50 ரூபாய் வரை விற்றது. அன்று 400 மூட்டை நெல் விற்று ஒரு டிராக்டர் வாங்க முடியும். ஆனால், இன்று அதே, டிராக்டரின் விலை சுமார் ₹8 லட்சம். ஆனால் ஒரு மூட்டை நெல் விலை ஏறத்தாழ ரூ.750தான். கிட்டதட்ட ஆயிரம் மூட்டை நெல் விற்றால்தான் இன்று ஒரு டிராக்டர் வாங்க முடியும். நெல்லின் பண்டமாற்று சக்தி இவ்வாறுதான் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். அதேபோல், அன்று இருபது மூட்டை நெல் விற்று ஒரு டன் இரும்பை வாங்க முடிந்தது. இன்றைய தேதியில் 75 மூட்டைக்கும் மேல் நெல் விற்றால்தான் வாங்க  முடியும்.

மக்களுக்கு தெரியாமல் விலைவாசி உயர்வு என்றாலே, விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்கள்தான் என்று அரசுகள் மக்களை பழக்கி வைத்துள்ளன. ஒரு ஆண்டிலேயே 20 சதவீத ஏற்றத்தினை பல பொருட்களில் கொண்டு வருகின்றது. அது போல, விவசாயிகளின் விளைவிக்கும் பொருட்களுக்கு 8சதவீதம் கூட விலை ஏற்றம் கிடைப்பது இல்லை. மாதம் 20 காசுகள் வீதம் ஏற்றினால் கூட, விவசாயிகள் முன்னேற வாய்ப்பு உண்டு. பல சம்பள கமிஷன்கள் மூலம் பல மடங்கு ஓராண்டிலேேய ஊதியத்தை உயர்த்தி பெறும் அரசு ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுசரணையாக இருக்கும்போது விவசாயிகளை மட்டும் ஏனோ தீண்டத்தகாதவர்களாகவும், அரசுக்கு விரோதமானவர்களாகவும் பார்க்கிறது. அந்த நிலையைதான் இன்று டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தின் மூலம் பார்க்க முடிகிறது என்கின்றன விவசாய சங்கங்கள்.

இன்றைய நிலையில் மத்திய அரசு ஆண்டுக்கு 95 லட்சம் மெட்ரிக் டன் நெல்லையும், 360 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையையும், 16.07 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களையும் கொள்முதல் செய்கிறது.
அதற்கேற்ப மத்திய அரசு நெல்லுக்கான ஆதார விலையை பொது ரகத்துக்கு குவின்டால் ரூ.1,868 ஆகவும், சன்ன ரகத்துக்கு குவின்டால் ரூ.1,888 ஆகவும் நிர்ணயித்துள்ளது. கோதுமை குவின்டாலுக்கு ரூ.1,868 ஆகவும் நிர்ணயித்துள்ளது. ஆனால் நெல் குவின்டாலுக்கு ரூ.4 ஆயிரமும், கோதுமை  குவின்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500ம் விவசாயிகள் கேட்டு வருகின்றனர்.

அதேபோல் கரும்புக்கு மத்திய அரசு டன்னுக்கு 10 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு ரூ.2,850ம், 9.5 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு ரூ.2,707.50ம் எனவும் ஆதார விலையை நிர்ணயித்துள்ளது. ஆனால் விவசாயிகள் 9.5 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 வழங்க கேட்டு வருகின்றனர். இவை தவிர மத்திய அரசு, கம்புக்கு குவின்டாலுக்கு ரூ.2,150ம், பட்டாணி குவின்டாலுக்கு ரூ.7,196ம், மக்காச்சோளம் குவின்டாலுக்கு ரூ.1,850ம் என ஆதார விலையை நிர்ணயித்துள்ளது. அதன்படி நெல் குவின்டாலுக்கு 3.7 சதவீதமும், சோளம் குவின்டாலுக்கு 4.9 சதவீதமும், கம்பு குவின்டாலுக்கு 2.6 சதவீதமும், மக்காச்சோளம் குவின்டாலுக்கு 3.5 சதவீதமும், பாசிப்பயறு குவின்டாலுக்கு 1.1 சதவீதமும், உளுந்து குவின்டாலுக்கு 1.8 சவீதமும், பருத்தி குவின்டாலுக்கு 2 சதவீதமும் மட்டுமே அதிகரித்துள்ளது.

ஆனால் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் சி2 அடிப்படையில் விவசாய விளைபொருட்களுக்கு அடிப்படை விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதேபோல் தமிழ்நாடு அரசும் நெல் குவின்டாலுக்கு ரூ.2,700ம், சோளம் குவின்டாலுக்கு ரூ.2,750ம், கம்பு குவின்டாலுக்கு ரூ.2,150ம், மக்காச்சோளம் குவின்டாலுக்கு ரூ.3,150ம், துவரை குவின்டாலுக்கு ரூ.2,100ம், பாசிப்பயறு குவின்டாலுக்கு ரூ.6,300ம், உளுந்து  குவின்டாலுக்கு ரூ.7,700ம், நிலக்கடலை குவின்டாலுக்கு ரூ.6,200ம், பருத்தி குவின்டாலுக்கு ரூ.5,400ம் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்று தனது தரப்பில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

தமிழகத்தை பின்பற்றி மேற்கு வங்கம், ஆந்திரம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களும் விவசாய விளைபொருட்களுக்கான ஆதார விலையை நிர்ணயித்து மத்திய அரசுக்கு தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைத்தன. ஆனால் மத்திய அரசு அவற்றை ஏற்கவில்லை. இதனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயி அந்த முதுகெலும்பு உடைக்கப்பட்டு நிரந்தர கடனாளியாகவே ஆக்கப்பட்டிருக்கிறான் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல் சீசன்களில் அதிகளவில் விளையும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களும் விவசாயி, தான் செலவிடும் பணத்தை கூட ஈட்ட முடியாமல் கடனில் தள்ளப்படும் அவலம் நீடித்து வருகிறது.

இதுபோன்ற அவலங்களை தவிர்க்க விவசாய விளைபொருட்களுக்கு ஆதாரவிலையை விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் உயர்த்துவதுடன், அதிகவிளைச்சல் உள்ள காலங்களில் கிடைக்கும் விளைபொருட்களை மதிப்புக்கூட்டு பொருட்களாகவும், பதப்படுத்தி பற்றாக்குறை காலங்களில் உரிய விலை கிடைக்கும் வகையில் குளிர்பதன கிடங்குகளையும், மதிப்புக்கூட்டு பொருள் உற்பத்தி கூடங்களையும் உருவாக்கி உழவனின் வாழ்க்கையில் ஒளியேற்ற மத்திய, மாநில அரசுகள் உருப்படியான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : plowman , Farmers
× RELATED வெள்ளியங்கிரி FPO-க்கு இந்திய தொழில்...