×

கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவது எங்கள் உத்தரவே கிடையாது : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதுடெல்லி : கொரோனா பாதித்தவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவது என்பது எங்களது உத்தரவே கிடையாது. இதனை மாநில அரசுகள் தன்னிட்சையாக செயல்படுத்தியுள்ளன என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில்,கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுவது அவர்களின் அந்தரங்கம், வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எதிரானது. இதனால் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்களிடமும் சமூக ஊடக குழுக்களிலும் கொரோனா நோயாளிகளின் பெயர்கள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இது நோயாளிகளை களங்கப்படுத்தும் செயலாக உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.
இந்த மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா நீதிபதிகள் முன்னிலையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதில்,கொரோனா பாதித்தவர்களின் வீடுகளின் வெளியே நோட்டீஸ் ஒட்டுவது என்பது மத்திய அரசின் உத்தரவே கிடையாது.

அதுகுறித்து எங்களது தரப்பில் எந்த அறிவுறுத்தலும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. அவர்களே தன்னிட்சையாக இதுபோன்று நோட்டீஸ் ஒட்டும் முறையை பின்பற்றி வருகின்றனர். மேலும் இதுகுறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து இதுதொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 3ம் தேதி  ஒத்திவைத்தனர்.

Tags : homes ,corona victims ,Supreme Court , Corona, victims, home, notice, federal government
× RELATED இல்லங்களில் நடைபெறும் இனிய வேல் பூசை