×

மதுரையில் பரபரப்பு: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

மதுரை: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (29). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு பஸ்நிலையம் அருகே  நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது மதுப்பாட்டிலை நண்பர்களிடம் கொடுத்து விட்டு ஸ்நாக்ஸ் வாங்க கடைக்கு அய்யனார் சென்றுள்ளார். ஆனால், அவர் வருவதற்குள் நண்பர்கள் மதுவை குடித்து விட்டனர். இதனால் அவர்களிடம் அய்யனார் தகராறு செய்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் டி.கல்லுப்பட்டி காவல்நிலையம் உள்ளது.

இதை கவனித்த போலீசார், அய்யனாரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே அய்யனார் மயங்கி விழுந்தார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் அய்யனாரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அய்யனார் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக அய்யனார் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு டி.கல்லுப்பட்டி போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர், காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madurai ,police station , Tensions in Madurai: A youth who was taken for interrogation fell unconscious at the police station and died
× RELATED இளையோர் தினவிழா