×

வேட்பாளரைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் பாஜக மூத்த தலைவர் வழக்கு

டெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மின்னணு வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கான சின்னங்களைப் போல நோட்டாவும் கடைசியில் இடம்பெற்றிருக்கும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வாக்காளர்கள் அனைவருக்குமான உரிமையே நோட்டாஎன்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவுக்கான பொத்தானை அழுத்தலாம். இதன் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்று அர்த்தம் கொள்ளப்படும். அண்மையில் நடைபெற்ற பிஹார் பேரவைத் தேர்தலில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனர். பாஜக மூத்த தலைவரும் வழக்கறிருமான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது;  ஒரு தொகுதியில் தேர்தல் நடை பெறும்போது அந்தத் தொகுதியில் வேட்பாளரைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழும்பட்சத்தில் அந்தத் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் அங்கு அடுத்த 6 மாதத்துக்குள் புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் அந்தத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. ஊழல், குற்றமயமாக்கல், சாதிவாதம், வகுப்புவாதம், மொழி, பிராந்தியவாதத்தைத் தடுக்கும் நோக்கில் இந்த உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.

இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டால், நேர்மையான, தேசப்பற்றுள்ள நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசியல் கட்சியினர் தள்ளப்படுவர். பல கோடிரூபாயை தேர்தலில் செலவழிக்கும் வேட்பாளர்கள் நிராகரிக்கப்படும் நிலையில், அதுபோன்ற வேட்பாளர்களை அரசியல் கட்சியினரும் தவிர்ப்பர். போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை உண்மையான ஜனநாயகத்தை குறிப்பதாக அமையும். ஏனெனில், மக்கள் தங்கள் பிரதிநிதிகளை உண்மையான அர்த்தத்தில் தேர்ந்தெடுக்க முடியும். இது போட்டியிடும் வேட்பாளர்களின் பொறுப்புகளை அதிகமாக்கும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : election ,candidate ,senior leader ,Supreme Court ,BJP , The election should be canceled if Notta gets more votes than the candidate; The case of the BJP senior leader in the Supreme Court
× RELATED முதல்வர் வேட்பாளர் யார் என்பது...