×

பிஞ்ச், ஸ்மித் அதிரடி சதம் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: தவான், ஹர்திக் பாண்டியா முயற்சி வீண்

சிட்னி: கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் அதிரடி சதத்தால் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா  66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ரன் குவிக்க ஏதுவான களம் என்பதால்  முதலில் பேட்டிங் செய்பவர்கள் அதிக ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த களத்தில் கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில்  முதலில் களம் கண்டவர்களின் ரன் குவிப்பு  சராசரி 310 ரன்னாக இருக்கிறது. அதற்கேற்ப டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக வார்னர், கேப்டன் பிஞ்ச் களம் கண்டனர். அமர்க்களமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 27.5 ஓவரில் 156 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. வார்னர் 69 ரன் (76 பந்து, 6 பவுண்டரி) எடுத்து வெளியேறினார்.

பின்னர் பிஞ்ச் - ஸ்மித் இணைந்து அதிரடியாக விளையாட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தனர். பிஞ்ச் தனது 17வது சதத்தை பதிவு செய்து அசத்தினார் (இந்தியாவுக்கு எதிராக 4வது சதம்). அவர் 124 பந்துகளில் 9பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 114 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் ராகுல் வசம் பிடிபட்டார். ஸ்டாய்னிஸ் டக் அவுட்டாகி வெளியேற, ஸ்மித் - மேக்ஸ்வெல் ஜோடி இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கிறது. மேக்ஸ்வெல் 19 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 45 ரன் எடுத்து ஷமி வேகத்தில் பெவிலியன் திரும்பினார். லாபுஷேன் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அபாரமாக விளையாடிய ஸ்மித் 37 பந்தில் அரை சதமும், 62 பந்தில் தனது 10வது சதமும் விளாசினார். அவர் 66 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 105 ரன் விளாசி கடைசி ஓவரில் அவுட்டானார். ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு  374 ரன் குவித்தது.  கேரி 17, கம்மின்ஸ் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஷமி 3, பூம்ரா, சைனி, சாஹல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அடுத்து 375 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. மயாங்க் அகர்வால், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். இருவரும் 5.2 ஓவரில் 53 ரன் குவித்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர், எனினும்... அகர்வால் 22 ரன், கேப்டன் கோஹ்லி 21 ரன், ஷ்ரேயாஸ் 2 ரன் எடுத்து ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 9.5 ஓவரில் 80 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. ராகுல் 12 ரன் எடுத்து ஸம்பா சுழலில் ஸ்மித் வசம் பிடிபட்டார்.இந்த நிலையில் தவான் - ஹர்திக் பாண்டியா இணை உறுதியுடன் போராடியது. ஆஸ்திரேலியா முதல் 25 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன் எடுத்த நிலையில், இந்தியா 25 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் கடந்ததால் வெற்றி நம்பிக்கை துளிர்த்தது. 31 பந்துகளில் பாண்டியாவும், 55 பந்துகளில் தவானும்  அரை சதம் அடித்தனர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 128ரன் சேர்த்தனர்.

தவான் 74 ரன் (86 பந்து, 10 பவுண்டரி), ஹர்திக் பாண்டியா 90 ரன் (76 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 25 ரன் விளாசி ஸம்பா சுழலில் மூழ்க, இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஷமி 13 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் கிளீன் போல்டானார்.  இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்து, 66 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சைனி 29 ரன், பூம்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஸம்பா 4, ஹேசல்வுட் 3, ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர். ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது.Tags : Australia ,Dhawan ,Hardik Pandya , Pinch, Smith Action Centurion Australia win first ODI: Dhawan, Hardik Pandya try in vain
× RELATED ஆஸ்திரேலியா 369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு