×

திடீர் பனிபொழிவால் வைரஸ் காய்ச்சல்: குழந்தைகள், முதியோர் அவதி

மானாமதுரை: மானாமதுரை பகுதியில் இரவு நேரத்தில் கடும் பனி பொழிவு காணப்படுவதால் வறட்டு இருமல், வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளிக்குப்பின் கடந்த வாரம் வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. ஆனால் மானாமதுரை வட்டாரத்தில் எதிர்பார்த்த பருவமழை இல்லை. மேலும் தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இரவில் மழையும், பகலில் வெயிலும் என சூழ்நிலை மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு உள்ளது.

இந்த பனிப்பொழிவு காரணமாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி தொந்தரவு, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமான முதியோர், குழந்தைகள் வந்து செல்கின்றனர். இதேபோல் மாவட்டத்தில் காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு முதலில் கொரோனா பரிசோதனைக்கு பின் வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இரண்டு நாட்கள் நோய் சிரமத்திற்குபின் பொது வார்டுகளுக்கு மாற்றப்படுகின்றனர். பகலில் மேகமூட்டத்துடன் ஈரப்பதம் அதிகம் காணப்படுகிறது. இதுபோன்ற காரணத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் எளிதில் பரவி வருகிறது.
சுகாதாரத்துறையினர் மானாமதுரை நகர் பகுதிகளில் பெயரளவில் ஆய்வு செய்துவிட்டு திரும்பியுள்ளனர். கிராமங்களில் சுகாதார பணி நடைபெறவில்லை. மேலும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் ஓய்ந்திருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரபாகரன் கூறுகையில், ‘திடீர் காலநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும். எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து கிராமங்களிலும் நிலவேம்பு கசாயம் வழங்கவேண்டும். காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்திட சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : snowfall ,Children ,elderly , Viral fever caused by sudden snowfall: Children, the elderly suffer
× RELATED டாப்சிலிப்பில் பனி மூட்டம்: குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி