×

திருப்போரூர் ஒன்றியத்தில் வீடுகளில் புகுந்த வெள்ளம் :1 லட்சம் பேர் தவிப்பு: இ.சி.ஆர். சாலையில் பயணிக்க தடை

சென்னை: திருப்போரூர் ஒன்றியம்  தையூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் ஓ.எம்.ஆர். சாலையின் இரு புறமும் கடல்போல் காட்சியளிக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, புதிய கல்பாக்கம், பட்டிபுலம், நெம்மேலி, சாலவான்குப்பம், தேவனேரி ஆகிய மீனவ கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. தண்டலம் கிராமத்தில் மழையினால் பாதிப்படைந்து வீடுகளை இழந்த 42 இருளர் குடும்பங்களை சேர்ந்த 230 பழங்குடி மக்கள் அங்குள்ள தொடக்கப் பள்ளியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மேலும். திருப்போரூர் ஒன்றியத்தில் மட்டும் கடந்த இரு நாட்களாக பெய்த மழையில் 20க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அவதிப்பட்டனர். முள்ளிப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பூண்டி, ராயமங்கலம் கிராமத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது.

கேளம்பாக்கம் அருகே தையூரில் ஓ.எம்.ஆர். சாலையில் கட்டப் பட்டுள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த மழையில் 2 மாடி அளவிற்கு மூழ்கியது. இதையடுத்து தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கார்களும் ஓ.எம்.ஆர். சாலையில் நிறுத்தப்பட்டன. மேலும், கார் பார்க்கிங் பகுதியில் தேங்கிய மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் திருப்போரூர் ஒன்றியம் மற்றும் ஈசிஆர் பகுதிகளில் வீடுகளின் கீழ்தளத்தில் ெவள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சுமார் 1 லட்சம் பேர் வீட்டைவிட்டு வெளியே முடியாமலும் இருக்க முடியாமலும் தவித்து வருகின்றனர். கோவளம் கடற்கரையில் நேற்று மாலை 5 மணியளவில் இருள் சூழ்ந்து இரவு 8 மணி போல் காட்சி அளித்தது. கடலுக்கும், கடற்கரைக்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு அலை 10 அடி உயரத்திற்கு எழும்பியது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதால் அப்பகுதியில் செல்பி எடுக்க பலரும் குவிந்தனர். கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மைக் மூலம் எச்சரிக்கை செய்து அனைவரையும் வெளியேற்றினார்.


Tags : Homes ,ECR ,road , Homes flooded in Thiruporur Union: 1 lakh people affected: ECR Prohibited from traveling on the road
× RELATED தூத்துக்குடியில் விடிய விடிய...