×

போலி தங்க பிஸ்கட் கும்பல் 7 பேர் கைது; முலாம் பூசி ஏமாற்றி விற்றது அம்பலம்: கும்பல் தலைவனுக்கு போலீஸ் வலை

சூலூர்: கோவை அடுத்த சூலூர் அருகே போலி தங்க பிஸ்கட் மற்றும் போலி தங்க நகை விற்பனை  செய்த மோசடி கும்பலை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் நகை  கொள்ளையிலும் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இக்கும்பலின் தலைவனை  போலீசார் தேடி வருகின்றனர். கோவை அடுத்த சூலூர் பாப்பம்பட்டியில் நடராஜ் என்பவரின் தோட்டத்தில் ஒரு பெண் தனது மகனுடன் வாடகைக்கு வசித்து வந்தார். இவர்களுடன் ஆந்திராவை சேர்ந்த 6 பேர் தங்கி இருந்துள்ளனர். இதிலிருந்த ஹரிமா என்பவரின் மனைவி ரமணா(40) என்பவர், அப்பகுதியிலுள்ள பெண்களிடம் தங்களிடம் வெளிநாட்டு தங்க பிஸ்கட்டுகள் இருப்பதாகவும், அவற்றை மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கடந்த 21ம் தேதி சம்பந்தப்பட்ட வீட்டை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் போலி தங்க பிஸ்கட்டுகள் இருந்ததை பறிமுதல் செய்தனர். வீட்டில் இருந்த ரமணா(40) என்கிற பெண் மற்றும் சுரேஷ்பாபு(23), சீனிவாஸ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இவ்வீட்டில் தங்கியிருந்த மற்ற 5 பேரை தேடி வந்தனர். இதையடுத்து கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில், ஆந்திரா குண்டூரை சேர்ந்த சீனு(20), சுப்புராவ் (20), அங்கம்மாராவ்(32), அவரது மனைவி அங்கம்மா(28) ஆகிய 4 பேர் சிக்கினர்.

அவர்களை விசாரித்தபோது, அவர்கள் சூலூர் பாப்பம்பட்டியில் வசித்த போலி தங்க பிஸ்கட் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், கருமத்தம்பட்டி அருகேயுள்ள மோப்பிரிபாளையத்தில் 25 பவுன் நகை கொள்ளையடித்த கும்பல் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இக்கும்பலின் தலைவன் பிடிபடவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 25 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. இக்கும்பல் வெள்ளி கட்டிகளை உருக்கி பிஸ்கட் வடிவிலான மோல்டிங்கில் ஊற்றி அதன்மீது தங்க முலாம் பூசி தங்க பிஸ்கட் எனக்கூறி ஏமாற்றி விற்று வந்துள்ளனர். மேலும் வெள்ளி நகைகளுக்கு தங்க முலாம் பூசி தங்க நகைகள் எனவும் கூறி விற்றுள்ளனர். இவர்களிடம் போலி நகை வாங்கிய ஒருவர் கொடுத்த புகாரிலேயே இக்கும்பல் சிக்கியுள்ளனர்’ என்றனர்.


Tags : Gang Leader , Fake gold biscuit gang arrests 7; Enamel Cheat Sold Exposed: Police Web to Gang Leader
× RELATED ஆண்டிபட்டி அருகே ஏடிஎம் மையத்தில்...