×

7.5% ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பல் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான ஒரு சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. அதன்படி இந்த ஆண்டே, மொத்தம் 313 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும், அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு  நடைபெற்று ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. “அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகள், கள்ளர் சீர்மரபின பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகிய மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையினை கருத்திற்கொண்டு,

அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படா வண்ணம், இந்த செலவினங்களை வழங்குவதற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை மற்றும் இதர கல்வி உதவி தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவினை பிறப்பித்துள்ளேன்” என கடந்த 18ம் தேதி அன்று 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் அறிவித்தேன். கலந்தாய்வில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவ - மாணவிகள், கல்வி கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தினை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இதனை நான் அறிவித்தேன்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், உடனடியாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த நிதியில் இருந்து மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை தமிழக அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Government ,Tamil Nadu ,government school students ,Chief Minister ,announcement ,MBBS ,colleges , Government of Tamil Nadu will pay the tuition and accommodation fees of public school students joining MBBS and dental colleges with 7.5% allocation: Chief Minister's announcement
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...