×

மேம்படுத்தப்பட்ட புதிய சாலைகளில் 5 ஆண்டு வரை எந்த பணியும் செய்யக்கூடாது: நெடுஞ்சாலைத்துறை திடீர் உத்தரவு

சென்னை: புதிதாக மேம்படுத்தப்பட்ட சாலைகளில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த பணிகளையும் செய்யக்கூடாது என்று நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறைக் கட்டுப்பாட்டில் 59 ஆயிரம் கி.மீ நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் பெருகி வரும் போக்குவரத்துக்கேற்ப சாலைகளை அகலப்படுத்துதல், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது, புதிய பாலங்கள் அமைத்தல், புறவழிச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதன்படி, ரூ.838 கோடியில் 514 மாநில நெடுஞ்சாலைகளில் 510 கி.மீ நீள சாலைகளும், ரூ.712 கோடியில் 505 மாவட்ட முக்கிய சாலைகளில் 778 கி.மீ நீள சாலைகளும், ரூ.1250 கோடியில் 1,008 மாவட்ட இதர சாலைகளில் 1,657 கி.மீ நீள சாலைகளும், ரூ.155 கோடியில் 120 சாலைகள் மாவட்ட இதர சாலைகள் சிறப்புக் கூறு திட்டத்தின் பேரில் 220 கி.மீ நீள சாலைகள் என மொத்தம் ரூ.2,956 கோடியில் 2,147 சாலைகளில் 3167 கி.மீ நீள சாலைகள் அகலப்படுத்துவது, மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.277 கோடியில் 706 இடங்களில் பாலங்கள், சிறுபாலங்கள், தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது.

அதே போன்று, சாலைகளின் ஓடுதளப்பாதையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.534 கோடியில் 598 மாநில நெடுஞ்சாலைகளிலும், ரூ.250 கோடியில் 464 மாவட்ட முக்கிய சாலைகள், ரூ.372 கோடியில் 1,116 மாவட்ட இதர சாலைகள், ரூ.7 கோடியில் மாவட்ட இதர சாலைகள் சிறப்பு கூறு திட்டத்தின் கீழ் 17 சாலைகள் என மொத்தம் ரூ.1,165 கோடியில் 2,195 சாலைகளின் ஓடுதள பணிகள் நடக்கிறது.  இப்பணிகள் அனைத்திற்கும் வரும் டிசம்பர் மாதத்துக்குள் டெண்டர் விட்டு முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பணிகள் மேற்கொள்ளப்படும் சாலைகளில் 5 ஆண்டுகள் வரை மீண்டும் அந்த சாலைகளில் அகலப்படுத்துவது, மேம்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Tags : roads ,Highways Department , No work should be done on upgraded new roads for up to 5 years: Highways Department emergency order
× RELATED ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3...