×

தமிழகத்தில் 2018ம் ஆண்டு 5.74 லட்சம் மரணங்கள் பதிவு ஒரு வயதுக்குட்பட்ட 9,985 குழந்தைகள் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் 2018ம் ஆண்டும் 5.74 லட்சம் மரணம் பதிவாகி உள்ளது. இதில் ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 9985 ஆகும். இந்தியாவில் பதிவாகும் பிறப்பு மற்றும் இறப்பை சம்பந்தபட்ட பதிவாளரிடம் 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமை பதிவாளர் தலைமையில் இந்த துறை செயல்பட்டுவருகிறது. பிறப்பு இறப்பு தொடர்பான விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதன்படி பிறப்பு இறப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிடும். இந்நிலையில் 2018ம் ஆண்டுக்கான பிறப்பு, இறப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய பிறப்பு, இறப்பு தலைமை பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி 2018ம் ஆண்டு தமிழகத்தில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 6 மரணங்கள் பதிவாகி உள்ளது. இதில் ஒரு வயதுக்குட்பட்ட 9985 பச்சிளம் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2018ம் ஆண்டு தமிழகத்தில் 5,74,006 மரணங்கள் பதிவாகி உள்ளது. இதில் ஆண்கள் 3,44,275 பேர். பெண்கள் 2,29,731 பேர். கிராமபுறங்களில் 2,82,772 பேரும், நகரபுறத்தில் 2,91,234 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

இதில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9985. கிராமபுறத்தில் 732 ஆண், 494 பெண் என்று மொத்தம் 1226 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். நகர்புறத்தில் 5031 ஆண், 3728 பெண் என்று மொத்தம் 8759 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொத்தமாக 5763 ஆண், 4222 பெண் என்று 9985 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஒன்று முதல் 4 வயதுக்குட்பட்ட 1770 பேர், 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 3517 பேர், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 13,664 பேர், 25 முதல் 34 வயதுக்குட்பட்ட 22,316 பேர், 35 முதல் 44 வயதுகுட்பட்ட 37,588 பேர், 45 முதல் 54 வயதுக்குட்பட்ட 69,021 பேர், 55 முதல் 64 வயதுட்பட்ட 1,10,199 பேர், 65 முதல் 69 வயதுகுட்பட்ட 67,674 பேர், 70 வயதுக்கு மேற்பட்ட 2.38,230 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : deaths ,Tamil Nadu , 5.74 lakh deaths in Tamil Nadu in 2018
× RELATED புதுவையில் உயிரிழப்பு ஏதுமில்லை புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று