×

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் உருளைக்கிழங்கு விலை கடும் உயர்வு

* வெங்காயம் விலை மீண்டும் அதிகரிப்பு
* இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் 10 ஆண்டாக இல்லாத அளவுக்கு உருளைக்கிழங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விலை உயர்வை தொடர்ந்து தீபாவளிக்கு முன்னதாக கூடுதலாக வெங்காயத்தையும், உருளைக் கிழங்கையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 14ம் தேதி வருகிறது. இந்த நிலையில் சமையல் எண்ணெய், பருப்பு விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. உளுந்தம் பருப்பு கிலோவுக்கு ₹25 வரை உயர்ந்து ஒரு கிலோ ₹120 வரை விற்கப்படுகிறது. துவரம் பருப்பு கிலோ ₹20 அதிகரித்து ஒரு கிலோ ₹120க்கும், கடலைப்பருப்பு ₹56லிருந்து ₹74 ஆகவும், பாசிப்பருப்பு ₹85லிருந்து ₹102, சன்பிளவர் ஆயில் ரூ.85லிருந்து ₹125, பாமாயில் ₹70லிருந்து ₹95, நல்லெண்ணெய் ₹180லிருந்து ₹240, கடலை எண்ணெய் ₹220லிருந்து ₹320 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இதே போல கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது. அதே போல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் வெங்காய இருப்பு வைப்பதற்கான வரம்புகளை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கும் தடை செய்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎப்டி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உருளைக் கிழங்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை தற்போது அதிகரித்துள்ளது. டெல்லியில் உருளைக்கிழங்கு விலை கிலோ ₹25க்கு விற்க்கப்பட்டது. இது தற்போது ₹40 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு என்பது 10 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ரூ.35க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.40க்கு விற்கப்பட்டுகிறது. இது சில்லறை விலையில் கிலோ ₹50 வரை விற்கப்படுகிறது. விளைச்சல் இல்லாதது, வரத்து குறைவே உருளைக்கிழங்கு விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் கடந்த மாதம் ெபரிய வெங்காயம்(பல்லாரி) ₹150 வரை விற்பனையானது. இதைத் தொடர்ந்து எகிப்து போன்ற வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனால், பெரிய வெங்காயம் விலை கிலோ ₹50, ரூ.60 என்று விற்கப்பட்டது. இந்த நிலையில் எகிப்து வெங்காயத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. மேலும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரும் ெவங்காயம் வரத்து தற்போது நின்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து மட்டுமே பெரிய வெங்காயம் வருகிறது. இதனால், பெரிய வெங்காயம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது பெரிய வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ₹70, ₹80 என்று விற்கப்படுகிறது. இது சில்லறை விற்பனையில் ஏரியாவுக்கு தகுந்தாற் போல் விற்கப்படுகிறது. அதாவது, கிலோ ₹100, ₹110 வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது. சாம்பார் வெங்காயம்(சின்ன வெங்காயம்) ரூ.140க்கும்(மொத்த மார்க்கெட்டில்), சில்லறை மார்க்கெட்டில் ₹170 வரையும் விற்கப்படுகிறது.

வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை கலக்கமடைய செய்துள்ளது. கிலோ கணக்கில் வாங்கி வந்தவர்கள் கிராம் கணக்கில் வெங்காயத்தை வாங்க தொடங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் சமையலிலும் வெங்காயத்தை தேவையை வெகுவாக குறைக்க தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் உருளைக் கிழங்கு, வெங்காய இறக்குமதியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ‘வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உரிய நேரத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எகிப்து, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதிக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. அதையடுத்து, தனியார் வர்த்தகர்கள் இதுவரை 7,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனர். மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம், தீபாவளிக்கு முன்பு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில்லறை விலையில் வெங்காயத்தின் விலை கடந்த 3 நாட்களாகப் படிப்படியாகக் குறைந்து தற்போது கிலோ ₹65க்கு விற்பனையாகிறது. விலை உயராமல் தடுக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுபோல், சில நாட்களாக உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, உருளைக்கிழங்கையும் மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. இன்னும் 2 நாட்களில் பூடானில் இருந்து 30,000 டன் உருளைக்கிழங்கு வந்து சேரும். உள்ளூர் சந்தைகளில் விற்பனையை அதிகப்படுத்தி, விலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இது தவிர, பதுக்கலை கட்டுப்படுத்த இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சார்பில் இடையக பங்குகளை வைத்திருக்கும் ‘நாஃபெட்’ திறந்த சந்தையில் வெங்காயத்தை விற்பனை செய்கிறது. இதுவரை நாஃபெட் 36,488 டன் வெங்காயத்தை விற்பனை செய்துள்ளது. உருளைக்கிழங்கைப் பொறுத்தவரை, அகில இந்திய சராசரி சில்லறை விலை கடந்த மூன்று நாட்களாக ஒரு கிலோ ₹42 ஆக நிலையானதாக உள்ளது’ என்றார்.

Tags : season , Festive period, potatoes, prices, rise
× RELATED பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் உருளைக்கிழங்கு விலை கடும் உயர்வு