×

பல ஆண் பறவைகளுடன் இணைந்து முட்டையிடும்..!! குமரியில் அரிய வகை ஜசானா பறவை அழியும் அபாயம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட குளங்களில் வாழ்கின்ற அரிய பறவையான ஜசானா என்று அழைக்கப்படும் தாமரை இலைக்கோழியின் இனம் முழுவதுமாக அழியும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜசானா எனப்படும் அரிய பறவை பலதார மணம் செய்யும் பறவையாகும். பொதுவாக பறவையின் கூடு என்றால் மேல் நோக்கி மரங்களைப் பார்ப்பது வழக்கம். ஆனால், இந்த பறவை குளங்களில் மிதக்கின்ற கூடுகளைக் கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. வெண்கலச் சிறகு தாமரை இலைக்கோழி, கோழிவால் தாமரை இலைக்கோழி என்ற இரு இனப்பிரிவுகள் குமரி குளங்களில் வாழ்கின்றன. குளங்களில் கிடைக்கின்ற சிறிய மரக்குச்சிகள், இலைகள் பாசிகள் ஆகியவற்றை வைத்து நீரின்மேல் மிதக்கின்ற கூடுகளை கட்டுகின்றன. பெண் பறவையானது சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண் பறவைகளுடன் அடுத்தடுத்து இணைந்து முட்டையிடுகின்றது.

இவ்வாறு, பல இணை சேருவதாலும், மிதக்கும் கூடுகளைக் கட்டுவதாலும், மிக அரிய பறவையாக கருதப்படுகிறது. முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகளை பராமரிக்கின்ற பொறுப்பு பொதுவாக பெண் இனத்தை சார்ந்ததாகும். ஆனால், இவ்வினத்தில் வழக்கத்திற்கு மாறாக ஆண் பறவை முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகளை பராமரிக்கின்ற செயலை செய்கின்றன. இவ்வரிய பறவைகளின் வாழிடங்கள் தற்போது பெருமளவில் அழிக்கப்பட்டு, சீரழிக்கப்படுகின்றன. குளங்கள் மாசுபடுதல், குளங்களை ஆக்கிரமித்தல், வேறு பயன்களுக்கு பயன்படுத்துதல் குளக்கரைகளை ஆக்கிரமித்து வீடுகட்டுதல் மற்றும் தோட்டம் உருவாக்குதல், குளங்களை தூர்வாராமல் மண்மூடி இருத்தல், அந்நிய நாட்டு செடிகளான ஆகாயதாமரை, காட்டாமணக்கு மற்றும் செடிகளின் ஆக்கிரமிப்பு, தாமரை இலை வளர்க்கின்றவர்கள் பறவைகளின் கூடுகளை பிரித்து எறிந்து முட்டைகளையும், குஞ்சுகளையும் அழித்து இனப்பெருக்கத்தை தடை செய்வது ஆகிய காரணங்களால் இப்பறவையின் வாழிடங்கள் அழிக்கப்படுவதால், பறவையின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

பல ஆயிரங்கள் எண்ணிக்கையில் இருந்தவை, நூறுகளாக குறைந்து தற்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் பரிதாபமாக உள்ளது. இப்படியே இந்நிலை தொடர்ந்து நீடிந்தால் அவ்வரிய பறவையை குமரி மாவட்டம் அறவே இழந்துவிடுகின்ற நிலையை ஒரு சில ஆண்டுகளில் எட்டிவிடும் என்பதில் சந்கேமில்லை. இப்பறவை கண்ணைக் கவரும் கவர்ச்சியாக பல வண்ணங்களில் இருப்பதால் மனிதர்களை ரசிக்க வைக்கும் ஓர் அழகிய பறவையாகும். இப்பறவை குமரி மாவட்டத்தின் பெருமைமிக்க சூழல் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இப்பறவையை இழப்பது குமரி மாவட்டத்திற்கு பெரிய இழப்பாகும். பறவையின் வாழிடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அல்லது வாழிடங்கள் அழிக்கப்பட்டால், பறவைகள் மீண்டும் அப்பகுதியில் இனப்பெருக்கம் செய்யாது. வாழிடங்கள் அழிக்கப்படும்போது, இப்பறவை இனப்பெருக்கத்தை நிறுத்திவிடும். விளைவாக அதன் இனம் அழிந்து விடும். இப்பறவை குறித்து பறவைகள் ஆய்வாளர் எஸ்.எஸ்.டேவிட்சன் கூறியதாவது: இந்த அரிய பறவையைப் பார்க்கவும், ஆய்வு செய்யவும் வெளிநாடுகளிலிருந்தும் பல பறவை அறிஞர்கள் வருகின்றார்கள். வனத்துறை, பொதுப்பணித்துறை மாவட்ட நிர்வாகம் இணைந்து இப்பறவையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பறவையின் வாழிடத்தை பாதுகாப்பதுடன், பறவையின் எண்ணிக்கை குறைகின்ற காரணங்களை தடுத்து நிறுத்தி, இப்பறவையை அழியாமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Kumari , Laying eggs with many male birds .. !! Endangered species of rare Jasana bird in Kumari
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...