×

தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்துக்கு போட்டியாக பரக்காணியில் தனியார் துறைமுகம்

புதுக்கடை: மத்திய மாநில அரசுகளால் சுமார் 105 கோடியில் உருவாக்கப்பட்ட தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு போட்டியாக தனியார் மீன்பிடி துறைமுகம் பரக்காணியில் செயல்பட்டு வருகிறது. இது குறித்து பல புகார்கள் அனுப்பியும் சம்மந்தப்பட்ட துறையோ, மாவட்ட நிர்வாகமோ கண்டு கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களின் சுமார் 50 ஆண்டுகால கோரிக்கையின் பேரில் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டது. 40 கோடியில் பணி துவங்கிய இந்த துறைமுகம் தற்போது சுமார் 105 கோடி செலவில் உருவாக்கப்பட்டு, மீனவர்கள் எந்த தடையும் இல்லாமல் மீன்பிடித்து வருகின்றனர். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தற்போது சுமார் 700க்கும் அதிகமான விசைபடகுகள், 6 ஆயிரத்துக்கும் அதிகமான வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த துறைமுகத்தில் மீன்பிடிக்க தமிழக விசைப்படகுகளுக்கு வருடம் 12 ஆயிரத்து 500 ரூபாயும், கேரளா விசை படகுகளுக்கு வருடம் 25 ஆயிரம் ரூபாயும் வரி செலுத்த வேண்டும் என்ற விதி முறை உள்ளது. கட்டுமர படகுகள் பதிவு செய்யும் போது மட்டும் குறிப்பிட்ட ஒரு தொகை வசூலிக்கப்படுவது வழக்கம். அது போன்று துறைமுகத்தில் நுழையும் வாகனங்களும் தினசரி வரி செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆண்டு தோறும் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக அரசு துறை முகத்தின் அருகில் குழித்துறை தாமிரபரணியாற்று பகுதியான பரக்காணியில் தற்போது குட்டி மீன்பிடி துறைமுகம் ஓன்று செயல் பட்டு வருகிறது. இதை தனி நபர் ஓருவர் நடத்தி வருகிறார். தமிழக அரசின் வருவாய் துறையில் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது. இந்த துறைமுகத்தை ஆற்றின் கரை பகுதியை இடித்து அந்த நபரின் பட்டா நிலத்தில் அமைத்துள்ளனர். மேலும் சிறு பைபர் படகுகள் அணையும் தளத்தை, ஆற்றை மண் போட்டு நிரப்பி அமைத்துள்ளனர்.

இந்த குட்டி துறைமுகத்தில் தினமும் 50 முதல் 100 விசை படகுகள் வந்து செல்வதாகவும், வாகனங்கள் நூற்றுக்கணக்கில் வந்து செல்வதாகவும் தெரிய வருகிறது. இங்கு வரும் விசை பங்குகளுக்கு நாள் ஒன்றிற்கு 200 ரூபாயும், வள்ளங்களுக்கு தினம் 100 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன. வாகன பார்க்கிங் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து தடை செய்யப்பட்ட சட்ட விரோதமாக வள மீன் இறங்குபவர்கள் இந்த தனியார் துறைமுகத்தை அதிக அளவில் பயன் படுத்துவதாக புகார் உள்ளது.

குறிப்பாக கொரோனா தடை உத்தரவு காலத்தில் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் தடை நிலுவையில் இருந்த பொது அதிக அளவில் கேரளா படகுகள் மற்ற படகுகள் இங்கு வந்து சென்றுள்ளன. அப்போது அதிக தொகை வசூலித்ததாக தெரிய வருகிறது. இதனால் தற்பொழுது தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு வருமானம் குறைந்துள்ளதாக பராரப்பு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மீனவர்கள் சார்பில் பல புகார்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சட்டத்துக்கு புறம்பாக பரக்காணி பகுதியில் செயல்படும் தனியார் மீன்பிடி துறைமுகம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கண்டுகொள்ளாத மீன்வளத்துறை: மிகப்பெரிய மோசடி

இது தொடர்பாக பைங்குளம் பேரூர் திமுக செயலாளர் அம்சி நடராஜன் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவில் எங்குமே இல்லாத வகையில் தேங்காப்பட்டணத்தில் மட்டும் சட்டத்துக்கு புறம்பாக வளமீன் இறக்குவதற்காகத்தான் இந்த தனியார் துறைமுகம் செயல்படுகிறது. இந்த துறைமுகத்தால் அரசு துறைமுகத்துக்கு பல கோடி இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக திமுக சார்பில் அரசுக்கு கடந்த சில தினம் முன்பு புகார் அனுப்பிய போது, தக்கலை சப் கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு செல்ல தபால் வந்தது. ஆனால் அந்த தபால் விசாரணை தேதி முடிந்து 5 நாட்களுக்கு பின்பு கிடைக்கின்ற வகையில் சம்மந்த பட்ட புகார் தெரிவித்த நபருக்கு அனுப்பப் பட்டிருந்தது. இதில் குறிப்பாக சட்டத்துக்கு புறம்பாக துறைமுகத்தை நடத்துபவர் குமரி மாவட்ட வருவாய் துறையில் பனி புரிபவர் என்பதால், சம்மந்த பட்ட கடிதம் புகார் அனுப்பியவருக்கு தாமதமாக கிடைக்க செய்துள்ளனர்.

இந்த செயல், அதிகாரிகளை தெரிந்துதான் நடந்தது. பராக்காணி தனியார் மீன்பிடி துறைமுகத்திற்கு குளச்சல் மீன்பிடி துறை முன்னாள் உதவி இயக்குனர் ஒருவர், துறைமுகத்தில் தற்போது பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஒருவர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் துணை போகின்றனர். மத்திய அரசு சட்டப்படி குஞ்சு மீன்கள் என்ற வள மீன்களை கரையில் ஒருவர் கொண்டு வந்தால், அந்த படகு பறிமுதல் செய்து, 5 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். 3 மாதம் சிறையுடன், 6 மாதம் கடலில் தொழில் செய்ய முடியாது. பிற மாநிலங்களில் இது கடை பிடிக்கப்படுகிறது. குறிப்பாக பிற மாநிலங்களில் கடற்படை அதிகாரிகளே கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் ஒரு சிலரது தூண்டுதலால் தேங்காப்பட்டணத்தில் இது கொடி கட்டி பறக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்களை திரட்டி போராட்டம் நடந்தும் சூழல் ஏற்படும் என்றார்.

Tags : fishing port , Private Port, State Government
× RELATED ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் பேரணி