×

இம்மாதத்தில் இரண்டாவது முறையாக 50 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த பாதிப்பு: கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கையும் சரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பு இம்மாதத்தில் 2வது முறையாக 50,000க்கு கீழ் குறைந்தது. இதே போல பலி எண்ணிக்கையும் குறையத் தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பலி குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45.149 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் 2வது முறையாக தினசரி பாதிப்பு 50,000க்கும் கீழ் குறைந்துள்ளது. முன்னதாக கடந்த 20ம் தேதி ஒரே நாளில் 46,790 பேர் பாதிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த 3 மாதங்களில் 24 மணி நேரத்தில் பதிவாகும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இது மிக குறைந்த எண்ணிகையாகும். கொரோனா நோய் தொற்றின் காரணமாக இதுவரை மொத்தம் 79 லட்சத்து 9,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 71 லட்சத்து 37,229 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 6 லட்சத்து 53,717ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 480 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கையானது 1 லட்சத்து 19,014 ஆக உள்ளது. பாதிப்பு குறைந்த நிலையில், பலியும் சரியத் தொடங்கி உள்ளது.

* ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா தொற்று
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘எனக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை. நலமாக இருக்கிறேன். வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டு பணியாற்றி வருகிறேன். தொலைபேசி மூலம் பணிநிமித்தமாக அதிகாரிகளுடன் பேசி வருகிறேன். இதனால் ரிசர்வ் வங்கி பணிகளில் எந்த தொய்வும் ஏற்படாது. சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’ என கூறி உள்ளார். இதே போல, தேசிய காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Low impact below 50,000 for the second time this month: The death toll from the corona also plummeted
× RELATED கொரோனா பலி எண்ணிக்கை திருவாரூரில் 105 ஆக உயர்வு தொற்று 10 ஆயிரத்தை கடந்தது