×

ஐஎம்இஐ நம்பரை மாற்றி விற்பனை: சேலத்தில் செல்போனை பறித்து பெங்களூருக்கு அனுப்பும் கும்பல்

சேலம்: சேலத்தில் செல்போன் பறிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் சிசிடிவி கேமரா மூலம் அதிரடியாக கைது செய்தனர். சேலத்தில் பறிக்கும் செல்போனை, பெங்களூரில் விற்பனை செய்யும் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. நாட்டில் செல்போன் வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஒவ்வொருவரும் ஒன்று முதல் இரண்டு செல்போன் வரை வைத்துள்ளனர். அதுவும் நவீன ஆன்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இதற்கிடையில் செல்போன் திருட்டு சம்பவங்களும் அதிகளவில் நடந்து வருகிறது. இவ்வாறு திருடும் செல்போனை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதும் தொடர்கிறது.

இதுகுறித்து போலீஸ் ஸ்சேடனில் புகார் கொடுக்கப்படும் பட்சத்தில், செல்போனில் உள்ள ஐஎம்இஐ என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்து செல்போனை மீட்டு வந்தனர். இவ்வாறு சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1,500க்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்டு, உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அதே போல குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சமீபகாலமாக இவ்வாறு திருட்டு போகும் செல்போன்கள் இருக்குமிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த விசாரணையில், செல்போனில் உள்ள ஐஎம்இஐ நம்பரை, அழித்துவிட்டு, மீண்டும் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவ்வாறு ஐஎம்இஐ நம்பரை அழிக்கும் கும்பலை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதுமுடியவில்லை.

இதற்கிடையில் சேலம் வீராணம் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் டூவீலரில் வந்த 3 பேர் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிக்கிய, 3 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் தான் சேலத்தில் பல்வேறு இடங்களில் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஷ்(20), அம்மாப்பேட்டையை சேர்ந்த அன்பழகன்(எ) ஆகாஷ்(19), நாகராஜ்(19) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், டவுன் ஆகிய பகுதிகளில் செல்போன் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சேலத்தில் திருடும் செல்போன்களை இவர்கள் ஏஜெண்ட் ஒருவர் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செல்போனை அங்குள்ள கும்பலை சேர்ந்தவர்கள், குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்வார்கள். அதன்பிறகு செல்போனின் ஐஎம்இஐ நம்பரை அழித்து விட்டு, மொத்தமாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்வார்கள். அவர்களிடம் இருந்து ஐஎம்இஐ நம்பரை அழிக்கப்பட்ட செல்போன்களை, சேலத்திலேயே அதனை விற்பனை செய்வதும் தெரியவந்தது. இவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட நபர் ஒருவரும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : gang ,Bangalore ,Salem , Cellphone, CCTV camera
× RELATED சென்னையில் செல்போன் சார்ஜ் போட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு