×

பாஜ கைப்பாவையாக செயல்பட்டதா சிபிஐ ? மேல்முறையீடு செய்ய தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:   கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்): இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைத்திருக்கிற அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இந்த வழக்கை நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் மத்திய புலனாய்வுத்துறை முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. இதன்மூலம் மத்திய புலனாய்வுத்துறை மத்திய பாஜ அரசின் கைப்பாவையாக செயல்பட்டதோ என்கிற பலத்த சந்தேகம் எழுகிறது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், நீதி வழங்கவில்லை. எனவே, இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும்.

கி.வீரமணி(திராவிடர் கழகம்): பாபர் மசூதி இடிக்கப்பட்ட சிபிஐ  நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கக் கூடியது. தந்தை பெரியார்,  ‘நம் நாட்டு நீதிமன்றங்கள் பெரிதும் சட்ட நீதிமன்றங்களே தவிர, நீதிக்  கோர்ட்டுகள் அல்ல’’ என்று கூறுவார். அதனை உறுதிப் படுத்துவதாகவே 28  ஆண்டுகளுக்குப் பிறகு வந்த இந்த நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது. வைகோ(மதிமுக): பாபர் மசூதியை இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், திட்டமிட்டு இச்சம்பவம் நடக்கவில்லை என்று அனைவரையும் விடுதலை செய்திருப்பது நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும். நடுநிலையோடு இப்பிரச்சினையை அணுகுகின்றவர்களின் மனசாட்சி இந்தத் தீர்ப்பு அநீதியின் தீர்ப்பு என்று தான் கூறும்.

 முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட்): மதவெறி தூண்டுதலால் இழைக்கப்படும் குற்றங்களுக்கு தண்டனை ஏதும் இல்லை என்றால், குற்றச் செயல்களில் இனி பலரும் எந்த அச்சமுமின்றி ஈடுபடுவார்கள். அரசியலமைப்பு அதிகாரம் பெற்றுள்ள சிபிஐ ஆளும் வர்க்கத்தின் முகமையாகவும், அதிகார மையத்தின். ‘எடு பிடிகளாகவும்‘ மாறி வருவதை, சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு மண்டையில் அடித்த உணர்த்தியுள்ளது. பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை லக்னோ சிறப்பு நீதிமன்றம்  கிஞ்சித்தும்  கருத்தில்கொள்ளாமல் குற்றவாளிகள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என்று விடுவித்திருப்பது நீதித்துறையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

திருமாவளவன்(விசிக): நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்தால் மக்கள் ஜனநாயக வழிமுறைகள் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடுவார்கள். அது நாட்டின் நல்லிணக்கமான சூழலுக்குப் பேராபத்தாக மாறிவிடும். இதை உணர்ந்து மத்திய அரசு இவ்வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். ஜவாஹிருல்லா(மமக): பாபரி பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக அமைந்துள்ளது. இது எதிர்பார்த்த தீர்ப்பாகவே அமைந்துள்ளது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : act ,CBI ,BJP ,leaders , Did the CBI act as a puppet of BJP? Urging leaders to appeal
× RELATED சாபத்திற்குரிய செயல்!