×

மன்னார்குடியில் வீடு கட்டும் திட்டத்தில் ரூ2.5 கோடி மோசடி எதிரொலி: சஸ்பெண்ட்டான பெண் ஊழியர் மகனுடன் தற்கொலை முயற்சி

மன்னார்குடி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2.5 கோடி மோசடி தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் ஊழியர் மகனுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலையாமங்கலம் ஊராட்சியில் கடந்த 2017 முதல் - 2019 வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், மத்திய அரசின் கழிவறை திட்டத்தில் ரூ.2.50 கோடி மோசடி நடந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 22 நபர்கள், அரசு கட்டிக்கொடுத்த வீடுகளை காணவில்லை என்று நடிகர் வடிவேலு பாணியில் தலையாமங்கலம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதுகுறித்து திருவாரூர் கலெக்டர் ஆனந்த் உத்தரவின்பேரில், கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட இயக்குனர் பொன்னியின் செல்வன் ஆகியோர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு தலையாமங்கலம் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்த விசாரணை அறிக்கையை சிறப்பு குழு, கலெக்டர் ஆனந்திடம் கொடுத்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், 2017 முதல் 2019 வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், திட்ட அலுவலராக இருந்து வரும், மன்னார்குடி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த ராஜா,

உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, தலையாமங்கலம் ஊராட்சி செயலாளர் பிரபாகரன் ஆகிய 4 பேரையும் கலெக்டர் ஆனந்த் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.மேலும் 7 நபர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக, தற்காலிக ஊழியராக பணியாற்றும் மன்னார்குடியை சேர்ந்த ஆனந்தி(38) என்பவரை, மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், பணி நீக்கம் செய்தார்.

இதையடுத்து இன்றுகாலை 9.45 மணியளவில் தன் மகன் விஷிலோகனை(8) அழைத்துக்கொண்டு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த ஆனந்தி, மன்னார்குடி யூனியன் அலுவலகம் வாசல் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இது குறித்து தகவலறிந்து வந்த மன்னார்குடி எஸ்.ஐக்கள் முருகன், ராஜேஷ்கண்ணன், உதயகுமார் ஆகியோர் ஆனந்தியை தடுத்து, அவரிடம் பேச்சுவாாத்தை நடத்தினர். இது குறித்து ஆனந்தி கூறுகையில்,நான் கடந்த 4 வருடமாக மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கான கணக்குகளை சரிபார்க்கும் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தேன்.

நடந்த முறைகேடுகளின் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. அதிகாரிகள் தப்பிப்பதற்காக என்னை பலிகடா ஆக்கி பணி நீக்கம் செய்துள்ளனர். என் கணவருக்கு வேலை இல்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வந்தேன். கலெக்டர் இதில் தலையிட்டு, எனக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்றார்.Tags : Echo ,suicide ,Mannargudi , 2.5 crore fraud in Mannargudi housing scheme: Suspended female employee attempts suicide with son
× RELATED ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்